July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

அரியானா; முதல்வர் பதவிக்கு காங்கிரசில் கடும் போட்டி

1 min read

Ariana; There is a tough competition in the Congress for the post of Chief Minister

6.10.2024

அரியானா தேர்தல் முடிவுகளே வராத நிலையில், முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குறி வைக்க ஆரம்பித்துள்ளனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அரியானா சட்டசபை தேர்தல் முடிந்து, அக்டோபர் 8ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. 90 தொகுதிகள் கொண்ட இம்மாநிலத்தில் 46 தொகுதிகளை வெல்பவர்கள் ஆட்சி அமைக்கலாம்.

ஓட்டு எண்ணிக்கைக்கு 2 நாட்களே உள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பாக பல்வேறு நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. இதில் அரியானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சி கிட்டத்தட்ட 55 தொகுதிகளை வெல்லும் என்றும், ஆட்சி அமைக்கும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

அரியானாவில் 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சிக்கு மக்கள் முடிவுரை எழுதிவிட்டதாக கருத்துக்கணிப்புகள் கூறும் நிலையில், ஒருவேளை கருத்துக்கணிப்புகள் உண்மையானால் யார் முதல்வர் என்ற பேச்சுகள் காங்கிரசில் எழ ஆரம்பித்துள்ளன. காங்கிரஸ் என்றாலே கோஷ்டிக்கு பஞ்சமில்லை என்பது அரசியலில் பால பாடம் தெரிந்தவர்களும் அறிந்த விஷயம்.
அதனை மெய்ப்பிக்கும் விதமாக ஹரியானாவில் வென்றால் தனக்கு தான் முதல்வர் பதவி வரும் என்று முக்கிய தலைவர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர். அரியானா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான புபிந்தர்சிங் ஹூடா, குமாரி செல்ஜா ஆகியோர் முதல்வர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து புபிந்தர் கூறி உள்ளதாவது;-
நாங்கள் அதிக தொகுதிகளில் வெல்வோம் என்று எதிர்பார்க்கிறோம். பா.ஜ.க, ஆட்சியில் இங்கு சட்டம், ஒழுங்கு மோசமாகிவிட்டது. ஊழல் மலிந்துவிட்டது, விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் இல்லை.

அமைச்சரவை எப்படி இருக்கவேண்டும் என்று கட்சி தலைமை முடிவு செய்யும். அதுபற்றி இப்போது ஏதும் கூறமுடியாது. குமாரி செல்ஜா, ரன்தீப் சுர்ஜூவாலா ஆகியோர் முதல்வராக விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் முதல்வர் ஆகும் ஆசை இருக்கும். ஆனால் கட்சியின் எம்.எல்.ஏ.க்களும், கட்சி மேலிடமும் தான் முதல்வர் யார் என்பதை முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.
குமாரி செல்ஜா, தற்போது லோக்சபா உறுப்பினராக உள்ளார். ஏற்கனவே மத்திய அமைச்சராக பதவி வகித்தவர். தலித் சமூகத்தில் செல்வாக்கு மிகுந்தவர். தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வலியுறுத்தி, தேர்தல் பிரசாரத்துக்கு கூட செல்லாமல் சில நாட்கள் ஒதுங்கி இருந்த செல்ஜாவை கட்சித் தலைமை சமாதானம் செய்து பிரசாரத்துக்கு வரவழைத்தது குறிப்பிடத்தக்கது.குமாரி செல்ஜா மட்டுமின்றி, ரன்தீப் சுர்ஜூவாலா, தீபேந்தர் உள்ளிட்டோரும் முதல்வர் பதவியை பெற ஆர்வத்துடன் முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.