‘இயல்பாகவும், எளிமையாகவும் இருந்தார்’ – அப்துல் கலாமை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி
1 min read
‘He was natural and simple’ – PM Modi remembers Abdul Kalam
15.10.2024
தமிழகத்தின் ராமேஸ்வரம் மாவட்டத்தில் எளிமையான குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் ஜனாதிபதியாக உயர்ந்தவர், டாக்டர் அப்துல் கலாம். இந்தியாவின் ‘ஏவுகணை நாயகன்’ என்று போற்றப்படும் அப்துல் கலாம், இஸ்ரோ மற்றும் டி.ஆர்.டி.ஓ.வில் பணியாற்றி, பல்வேறு முக்கிய ஏவுகணை திட்டங்களுக்கு தலைமை தாங்கினார். பொக்ரான் அணுகுண்டு சோதனையில் தொழில்நுட்ப ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அப்துல் கலாம் ஆற்றிய பங்கு மிகவும் முக்கியமானது.
இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளான பாரத ரத்னா, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை பெற்ற அப்துல் கலாம், கடந்த 1931-ம் ஆண்டு அக்டோபர் 15-ந்தேதி, ஜைனுலாப்தீன் மற்றும் ஆசியம்மா தம்பதியின் 5-வது மகனாக பிறந்தார். சிறுவயது முதலே விமானங்கள் மீது அதீத ஆர்வம் கொண்டவராக விளங்கினார். இளைஞர்கள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த அப்துல் கலாம், மிகப்பெரிய கனவுகளை காண வேண்டும் என மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.
கடந்த 2002-ம் ஆண்டு அப்போதைய ஆளும் பா.ஜ.க. அரசு மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு, இந்தியாவின் 11-வது ஜனாதிபதியாக அப்துல் கலாம் பதவியேற்றார். ஜனாதிபதியாக பதிவியேற்ற பிறகும், பள்ளிகளுக்கு சென்று மாணவர்களை சந்திப்பதையும், அவர்களுடன் கலந்துரையாடுவதையும் அப்துல் கலாம் வழக்கமாக கொண்டிருந்தார். அப்துல் கலாம் மறைந்த பிறகு, அவரது பிறந்த தினமான அக்டோபர் 15-ந்தேதியை இளைஞர் மறுமலர்ச்சி தினமாக தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில், இன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 93-வது பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் மோடி அவரை நினைவு கூர்ந்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அப்துல் கலாம் உடனான தனது சந்திப்புகள் குறித்த வீடியோ ஒன்றை பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது;-
“புகழ்பெற்ற விஞ்ஞானியும், முன்னாள் ஜனாதிபதியுமான டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு மரியாதைக்குரிய அஞ்சலிகள். அவரது தொலைநோக்கு பார்வையும், எண்ணங்களும் ‘வளர்ச்சியடைந்த பாரதம்’ என்ற இலக்கை அடைய பெரிதும் உதவும்.
அப்துல் கலாம் இயல்பாகவும், எளிமையாகவும் இருந்தார். இந்த உலகில் இரண்டு வகையான மனிதர்கள் உள்ளனர்; வாய்ப்புகளை தேடுபவர்கள் மற்றும் சவால்களை தேடுபவர்கள். அப்துல் கலாம் எப்போதும் சவால்களை தேடிச் சென்றார்.”
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.