ஷேக் ஹசீனாவுக்கு கைது வாரண்ட்: வங்கதேச கோர்ட் உத்தரவு!
1 min read
Arrest warrant for Sheikh Hasina: Bangladesh court order!
17.10.2024
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை கைது செய்ய, அந்நாட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. வாரண்ட் உத்தரவில், நவம்பர் 18ம் தேதிக்குள் ஷேக் ஹசீனாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இட ஒதுக்கீடு தொடர்பாக, வங்கதேச மாணவர்கள் நடத்திய போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாத ஷேக் ஹசீனா, பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, நாட்டை விட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
இதனை தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ்( 84), தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது.
இந்நிலையில், 15 ஆண்டுகளாக பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, தனது ஆட்சிக்காலத்தில், எதிர்க்கட்சி கட்சியை சேர்ந்தவர்கள் மீது மனித உரிமை மீறல்கள் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுவும் ஜூலையிலிருந்து ஆகஸ்ட் மாதத்திற்குள் அதிகப்படியான குற்றங்கள் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் முகம்மத் தாஜூல் இஸ்லாம் கூறியதாவது:
ஹசீனா, நாட்டை விட்டு சென்றதிலிருந்து இங்குள்ள மக்களை சந்திக்கவில்லை. அவர்,இந்திய தலைநகர் டில்லி அருகே, ராணுவ பகுதியில் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.
இதனால் இந்திய, வங்கதேச அரசுகள் இடையே பதற்றம் நீடித்து வருகிறது. தற்போது வங்கதேசத்தில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், மாணவர்கள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நீதிமன்றத்தில் ஹசீனா மீதான வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதை விசாரித்த நீதிமன்றம், ஹசீனாவை கைது செய்து நவ.,18க்குள் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனால் இந்திய அரசுக்கு தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டுள்ளது.