மிஸ் இந்தியா 2024 பட்டத்தை வென்ற மத்திய பிரதேச பெண்
1 min read
Madhya Pradesh girl wins Miss India 2024 title
17.10.2024
பெமினா மிஸ் இந்தியா 2024 இறுதிப் போட்டி மும்பையில் நேற்று நடைபெற்றது. மிஸ் இந்தியா அழகிப் போட்டி தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இத்தனை ஆண்டுகளில் ஏராளமான இளம் பெண்கள் சினிமா, பேஷன், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வெற்றியாளர்களாக திகழ்வதற்கு இந்த அழகிப் போட்டி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
இதனை கொண்டாடும் வகையில், மிஸ் இந்தியா 2024 போட்டி பிரம்மாண்டமான அளவில் பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டது. இதையடுத்து மும்பையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் மிஸ் இந்தியா 2024 பட்டத்தை மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நிகிதா போர்வால் வென்றார்.
இவருக்கு கடந்த ஆண்டு வெற்றி பெற்ற நந்தினி குப்தா மற்றும் நேஹா தூபியா ஆகியோர் கிரீடம் அணிவித்து கவுரவித்தனர். தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியைச் சேர்ந்த ரேகா பாண்டே 2-வது இடத்தையும், குஜராத்தைச் சேர்ந்த ஆயுஷி தோலாக்கியா 3-வது இடத்தையும் பிடித்தனர்.
இது குறித்து நிகிதா போர்வால் பேசுகையில், “இந்த உணர்வு என்னால் விவரிக்க முடியாததாக இருக்கிறது. கிரீடத்தை அணிந்து கொள்வதற்கு முன்பு நான் உணர்ந்த நடுக்கங்கள் இன்னும் என்னை விட்டு அகலவில்லை. எனது பயணம் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது. சிறப்பான விஷயங்கள் இனிமேல்தான் வர இருக்கின்றன” என்று தெரிவித்தார்.