அரியானா முதல்-மந்திரியாக நயாப் சிங் சைனி பதவியேற்பு; பிரதமர் மோடி பங்கேற்பு
1 min read
Nayab Singh Saini sworn in as Ariana Chief Minister; Prime Minister Modi will participate
17.10.2024
அரியானாவில் கடந்த 5-ந்தேதி நடந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜனதா அபார வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் அந்த கட்சி முதல் முறையாக 48 இடங்களை கைப்பற்றியது. அங்கு புதிய அரசு அமைப்பதற்கான ஏற்பாடுகளை அந்த கட்சி மேற்கொண்டது. இதற்காக முதல்-மந்திரி நயாப் சிங் சைனி, டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா மூத்த தலைவர்களை சந்தித்தார்.
இதைத்தொடர்ந்து கட்சியின் சட்டமன்றக்குழு தலைவரை (முதல்-மந்திரி) தேர்வு செய்வதற்காக பா.ஜனதா புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று நடந்தது. பஞ்ச்குலாவில் நடந்த இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் மத்தியபிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ் ஆகியோர் மேலிட பார்வையாளர்களாக பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவராக (முதல்-மந்திரி) நயாப் சிங் சைனி மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், 2வது முறையாக, அரியானா மாநில முதல்-மந்திரியாக நயாப் சிங் சைனி பதவியேற்றார். அவருக்கு கவர்னர் பண்டாரு தாத்தரேயா பதவி பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து, அனில் விஜ், கிருஷ்ண பேடி, கிருஷ்ணலால் பன்வார், அரவிந்த் சர்மா, கிருஷ்ணா மித்தா, மஹிபால் தண்டா, மூல் சந்த் சர்மா, லக்ஷ்மன் யாதவ், ராவ் நர்பீர், சுனில் சங்வான், பிபுல் கோயல், தேஜ்பால் தன்வார் ஆகிய 13 பேர் மந்திரிகளாக பதவியேற்றனர்.
இந்த விழாவில், பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா, பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள், ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அரியானாவில் தொடர்ந்து 3-வது முறையாக பாஜக அரசு பதவியேற்றுள்ளது.