60 யானைகள் உயிரை காப்பாற்றிய ஏ.ஐ., தொழில்நுட்பம்
1 min read
AI technology saved the lives of 60 elephants
19.10.2024
திஸ்புர்: அசாம் மாநிலத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) தொழில்நுட்பம் உதவியால், தண்டவாளத்தை கடந்த 60 யானைகளின் உயிரை ரயில் டிரைவர் காப்பாற்றி உள்ளார்.
நாட்டின் பல மாநிலங்களில் யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. இது போன்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு மத்திய அரசு தொழில்நுட்பம் உதவியுடன் சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி, செயற்கை நுண்ணறிவு என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. மேற்கு வங்கம், அசாம், ஒடிசா ஆகிய மாநிலங்களிலும், தமிழகத்தில் கோவையிலும் கஜ்ராஜ் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது. இதன்படி, தண்டவாளங்கள் அருகே செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) சென்சார்கள், கேமிராக்கள் பொருத்தப்படும்.
இந்த கேமிராக்களில் சாதாரண வீடியோ, தெர்மல் வியூ எனப்படும் வெப்ப காட்சி என இருவகையான வீடியோ காட்சிகளை பார்க்கலாம். தண்டவாளம், அதன் இருபக்கம் 100 அடி வரையில் யானைகள் வந்தால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது வேலை செய்யும்.
யானை எங்கிருக்கிறது என்பது கண்டறியப்பட்டு, அருகில் உள்ள ரயில் நிலையம், அங்கு பணியில் இருக்கும் அதிகாரி, வனத்துறை ஊழியர்களுக்கு மெசேஜ் அனுப்பப்படும். அதாவது, யானை எந்த டிராக்கில் எத்தனையாவது மைல் கல் அருகே நிற்கிறது என்ற விவரங்கள் அந்த மெசேஜ் மூலம் தெரிவிக்கப்படும்.
அடுத்த நொடியே இதே மெசேஜ், ரயில் டிரைவர், உதவி டிரைவர் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டு படிப்படியாக ஹாரன் அடித்துக் கொண்டே ரயிலானது மிக மெதுவாக இயக்கப்படும். யானைகள் மட்டுமின்றி எந்த வனவிலங்குகள் தண்டவாளம் அருகில் வந்தாலும் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் செயல்படும்.
இப்படியான நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தான் அசாமில் தண்டவாளத்தை கடந்த 60 யானைகளின் உயிர் காப்பாற்றப்பட்டு இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:
கவுகாத்தியில் இருந்து லும்டிங் பகுதிக்கு காம்ரூப் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. ஹபாய்பூர், லம்சக்ஹாங் ரயில் நிலையங்கள் இடையே இந்த ரயில் வந்தபோது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் யானைகள் தண்டவாளத்தை கடக்கும் எச்சரிக்கை அறிவிப்பு இயங்கியது.
உடனடியாக சுதாரித்த ரயில் டிரைவர் தாஸ், உதவி ரயில் டிரைவர் உமேஷ் குமார் இருவரும் எமர்ஜென்சி பிரேக்குகளை பயன்படுத்தி ரயிலை நிறுத்தி உள்ளனர். அப்போது 60க்கும் மேற்பட்ட யானைகள், தங்கள் குட்டிகளுடன் தண்டவாளத்தை கடந்து மறுபுறம் சென்றன.
ரயிலில் இருந்து இறங்கிய டிரைவர் மற்றும் ரயில்வே ஊழியர்கள் யானைகள் கூட்டம் தண்டவாளத்தை கடந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டதா என்பதை நேரிடையாக சென்று உறுதிப்படுத்தினர். அதன் பின்னர் ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் 60க்கும் மேற்பட்ட யானைகளின் உயிர் காப்பாற்றப்பட்டு உள்ளது. சரியான நேரத்தில் சுதாரித்து, சமயோசிதமாக நிலைமையை கையாண்டு, யானைகள் உயிரை காப்பாற்றியதில் முக்கிய பங்கு வகித்த ரயில் டிரைவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.