தென்காசியை குற்றம் நடைபெறாத மாவட்டமாக மாற்ற முயற்சி- எஸ்.பி.
1 min read
Attempt to make Tenkasi a crime-free district- S.P.
19.10.2024
தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வி ஆர் ஸ்ரீனிவாசன் நேற்று தென்காசி மாவட்ட பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அபபோது தென்காசி மாவட்டத்தை குற்றம் நடைபெறாத மாவட்டமாக மாற்ற காவல்துறை செய்துவரும் முயற்சிகளுக்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவுபடி தென்காசி மாவட்டத்தை குற்றம் நடைபெறாத மாவட்டமாக உருவாக்க காவல்துறை முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன்படி சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, போதை பொருட்கள் ஒழிப்பு, குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு, சைபர் குற்றங்கள், சாலை விதிமுறைகள் கடைபிடித்தல் உள்ளிட்ட பிரச்சனைகளில் தீவிரம் காட்டி வருகிறது.
அதன்படி பள்ளி மாணவ மாணவியர்களுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள் அல்லது குற்ற செயல்கள் ஏதேனும் நடைபெறுவது தெரிந்தாலோ, ஜாதி மத அடையாளங்களை பயன்படுத்தி பிரச்சினைகளில் ஈடுபட்டாலோ, சாலை ஓரங்களில் நின்று கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வரும் மாணவ மாணவிகளை கேலி கிண்டல் செய்தாலோ, அல்லது வேறு ஏதேனும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டாலோ, ஈடுபட வற்புறுத்தினாலும் அது பற்றிய தகவல்களை 100 அல்லது 98 84042100 என்ற எண்ணுக்கு 24 மணி நேரமும் தகவல் தெரிவிக்கலாம் வாட்ஸ் அப் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம்.
மாணவர்கள் இளைஞர்கள் போதை பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். போதைக்கு அடிமையாகி போதையினால் குற்ற செயல்களில் ஈடுபட்டு தனது எதிர்காலத்தை சீரழிப்பதுடன் தங்களது குடும்பத்தாரின் வாழ்க்கையையும் சீரழித்துக் கொள்கின்றனர். சமீபத்திய குற்ற சம்பவங்களின் பின்னணியில் போதைப் பொருட்கள் பயன்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் போதைக்கு அடிமையானவர்கள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போன்ற கொடூர செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்துவது மற்றும் விற்பனை செய்வது தெரிய வந்தால் உடனடியாக 10581 மற்றும் 9498410581 எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் மாணவ மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்குவதற்காக 10581, 14416, 9498110581 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான தகவல்களை உடனடியாக தங்களது பெற்றோர்கள் அல்லது ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிப்பதுடன் காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். இதற்கான உதவி எண் 181 அல்லது 1098 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.
18 வயது நிரம்பாத குழந்தைகளுக்கு இழைக்கப்படும் பாலியல் குற்றங்களின் ஈடுபடும் நபர்கள் போக்சோ எனும் கடுமையான சட்டம் மூலம் தண்டிக்கப்படுவார்கள். 18 வயது பூர்த்தியடையாத பெண் குழந்தைகளுக்கு நடத்தப்படும் குழந்தை திருமணத்தைப் பற்றி தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவித்து அந்த குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு குழந்தை திருமணத்தை நடத்தும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் குற்றவாளிகள் ஆவார்கள்.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி காவல் உதவி செயலி உருவாக்கப்பட்டுள்ளது அதனை பதிவிறக்கம் செய்து அவசர காலங்களில் பயன்படுத்தி காவல்துறை உதவியை பெற்றுக் கொள்ளலாம் இதற்கான உதவி எண்கள் 181, 1098 ஆகும்.
நவீன தொழில்நுட்ப உதவியுடன் பல்வேறு வகையான சைபர் குற்றங்கள் நடைபெற்று வருகிறது. முன்பின் தெரியாத நபர்கள் தங்களிடமும் பெற்றோரிடமோ உறவினர்களிடமோ தொடர்பு கொண்டு வங்கியில் இருந்து பேசுவதாக கூறி வங்கி கணக்கு தொடர்பான தகவல்கள் ஓடிபி, பின் நம்பர், ஆதார் எண், பிறந்த தேதி, கேட்டு தங்களது வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடுகிறார்கள் எனவே யாருக்கும் ஓடிபி, பின் நம்பர், ஆதார் எண் ,ஆகியவற்றை தெரிவிக்க வேண்டாம்.
ஆன்லைன் மூலமாக வேலைவாய்ப்பு அல்லது ஆன்லைன் மூலமாக லோன் என்று செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு ஆன்லைனில் பணம் செலுத்தும் படி கூறினால் பணம் செலுத்த வேண்டாம். ஆன்லைன் மூலமாக எந்த ஒரு சந்தேகத்திற்கு உரிய லிங்கையும் கிளிக் செய்ய வேண்டாம் இதன் மூலம் தங்களின் அனைத்து தகவல்களும் திருடப்படும்.
ஆன்லைன் மூலமாக விளையாடி அதன் மூலம் ஏற்படும் பணம் இழப்பை தவிர்க்கவும் புதிய தொழில்நுட்பங்களை ஆக்கபூர்வமான நல்வழியில் பயன்படுத்தி மாணவ மாணவியர்கள் இளைய சமுதாயம் நம்முடைய நாட்டை நல்வழியில் முன்னேற்ற பாதையில் செல்ல ஒரு மனதாக செயல்பட வேண்டும்.
சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு உடனடியாக சைபர் க்ரைம் உதவி எண் 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
பொதுமக்கள் பள்ளி,கல்லூரி மாணவ, மாணவிகள், சாலை மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிந்து தான் பயணிக்க வேண்டும். கண்டிப்பாக சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் மாணவர்கள் அதிவேகமாக செல்லக்கூடாது. பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியவாறு சாகச பயணம் மேற்கொள்ளக் கூடாது. 18 வயது நிரம்பாதவர்கள் மோட்டார் வாகனத்தை ஓட்டக்கூடாது மீறி அனுமதித்தால் பெற்றோர்கள் அல்லது வாகனத்தின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்கண்ட குற்றங்கள் நடைபெற்றாலோ அல்லது நடைபெறுவது தெரிய வந்தாலோ உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் மேலும் மேற்படி குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்க அனைத்து முயற்சியும் மேற்கொள்ள வேண்டும். தென்காசி மாவட்ட காவல்துறை 24 மணி நேரமும் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.தென்காசி மாவட்டம் குற்றமில்லா மாவட்டமாக திகழ அனைவரும் முழு ஒத்துழைப்பு தாருங்கள்.
தென்காசி மாவட்ட பொதுமக்கள் காவல்துறையின் உதவி தேவைப்படும் நேரங்களில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக எண் 9489003324 அல்லது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எண் 9442233577 என்ற எண்களின் தொடர்பு கொள்ளலாம்