ரயிலில் ‘ஓசி’ பயணம்: 400 பேருக்கு அபராதம் விதித்தது ரயில்வே
1 min read
‘OC’ travel by train: Railways fined 400 people
19/10/2024
உ.பி., மாநிலம் காசியாபாத்தில் இருந்து வெளியூர் செல்லும் ஏராளமான ரயில்களில் தினமும் போலீசார் பயணித்து வருகின்றனர். அவ்வாறு செல்லும் போலீசார் டிக்கெட்டுகளை எடுக்காமல் குளிர்சாதன வகுப்பு, முன்பதிவு செய்த படுக்கைகளில் ஏறிக் கொண்டு பயணிகளை தொந்தரவு செய்வதாக ஏராளமான புகார்கள் ரயில்வே நிர்வாகத்துக்கு வந்தன.
ரயில்களில் முன்பதிவு பெட்டிகள் மட்டுமல்லாது, பாண்ட்ரி எனப்படும் சமையல் அறைகளிலும் அவர்கள் பயணிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. தொடர் புகார்களை அடுத்து, ரயில்வே நிர்வாகம் அதிரடியான நடவடிக்கைகளுக்கு தயாரானது.
குறிப்பாக பிரக்யாராஜ் ரயில் நிலையத்தில் இத்தகைய புகார்கள் அதிகம் குவிந்தததால் அங்கு அதிரடி ஆக்சன் நடத்த அதிகாரிகள் முடிவு செய்தனர். தொடர்ச்சியாக காசியாபாத் மற்றும் கான்பூர் இடையே செல்லும் ரயில்கள் அதிரடி சோதனையில் இறங்கினர்.
ஒரு மாதமாக இடைவிடாது நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் போலீசார் 400 பேர் சிக்கினர். டிக்கெட் இன்றி பயணித்தது, முன்பதிவு பெட்டிகளில் ஏறி பயணிகளுக்கு தொந்தரவு கொடுத்தது உள்ளிட்ட வகைகளில் அவர்களுக்கு ரயில்வே அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறி உள்ளதாவது; ரயில்களில் டிக்கெட் இல்லாமல் செல்வது, முன்பதிவு பயணிகளுக்கு மட்டும் இடைஞ்சல் இல்லை. ரயில்வேக்கும் பெரும் இழப்பு. அதனால் இதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்கி உள்ளோம். இத்தகைய நடவடிக்கைகள் தொடரும்.
சோதனை நடப்பதை அறிந்த பலர் ரயில்களில் இருந்து அவசர, அவசரமாக மற்ற பெட்டிகளை வேகமாக கடந்து சென்றுவிட்டனர். இனி தீபாவளி பண்டிகை வர உள்ளதால் எங்களின் சோதனை கடுமையாக இருக்கும். இவ்வாறு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.