கிராமசாலையில் கனரக வாகனம்; விதிமுறையை மீறும் குவாரிகள்-ரவிஅருணன் ஆவேசம்
1 min read
Heavy vehicle on village road; Quarries that defy norms-Ravi Arunan’s obsession
20.10.2024
இயற்கை வள பாதுகாப்பு சங்க தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.ரவிஅருணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிராமச் சாலைகளில் மிக கனரக வாகனங்கள் செல்ல வேண்டுமென்றால் சாலைகள் அதற்கு ஏற்றவாறு அகலப்படுத்தி பலப்படுத்தி இருக்க வேண்டும். அவ்வாறு பலப்படுத்தினால் தான் கனரக வாகனங்களை கிராமச் சாலைகளில் இயக்க முடியும். ஆனால் தற்போது சாலையை பலப்படுத்தாமல் அகலப்படுத்தாமல் 22 சக்கரம் 18 சக்கர வாகனங்களைகிராமச் சாலைகளில் இயங்குகின்றனர். இதனால் சாலை பழுதடைந்து சாலையில் உள்ள குழாய் பாலங்களும் சேதமடைந்து குடிநீர் விநியோகத்திற்காக ஆங்காங்கே பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு, கனிம வளத்திலிருந்து அரசுக்கு கிடைக்கக்கூடிய வருவாயை விட அந்த சாலையை பாலங்களை குடிநீர் திட்டங்களை சீரமைப்பதற்கு அரசுக்கு அதிகமாக செலவாகிறது. கனரக வாகனத்தின் அகலத்திற்கு தான் சாலை உள்ளது. சாலையில் பொதுமக்கள் பயணிக்கவே இயலவில்லை. சைக்கிளில் செல்வோரும் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். அந்த கிராமச் சாலைகளில் கனரக வாகனங்கள் பயணிக்கலாமா என்பதை முதலில் மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும்.
எனது நண்பர் ஒருவர் தூத்துக்குடியில் கண்காணிப்பு பொறியாளராகபணியாற்றினார். அப்போது இதே போன்று உள்ள கிராமச் சாலையில் கனரக வாகனங்களை இயக்க வேண்டும் என்று அனுமதி கோரினர். அதற்கு அவர் சாலையை அகலப்படுத்தி பலப்படுத்தினால் தான் நான் அதற்கு அனுமதி அளிக்க முடியும் என்று கூறியதன் விளைவாக சாலையை அகலப்படுத்தவும் பலப்படுத்தவும் நிதி ஒதுக்கி சாலையை சீரமைத்த பின்னரே அனுமதி அளித்தார்.
ஆனால் தற்பொழுது உள்ள அதிகாரிகள் விதியை மீறி அனுமதிக்கின்றனர். ஆகவே மாவட்ட நிர்வாகம் விதியை மீறி கிராம சாலைகளில் கனரக வாகனங்கள் இயங்குவதை உடனே தடை செய்ய வேண்டும் என்று கோரி இந்த 23ஆம் தேதி காலை 10 மணி அளவில் புளியறையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு அனைவரும் அலைகடல் என திரண்டு வாரீர்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இன்னொரு அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-
வெடிப்பொருட்களை உபயோகிப்பதற்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன. எந்த குவாரியும் அவைகளை பின்பற்றுவதில்லை.
ஞாயிறு முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் 3 மணி வரை சனிக்கிழமை காலை 9 மணி முதல் ஒரு மணி வரை தான் வெடி வைக்க முடியும். வார இறுதியான ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் வெடிகள் வெடிக்கப்பட கூடாது.
வெடிக்கும் வெடிச்சத்தம் ஆனது குவாரியில் 115 டெசிபெல்ஸ் அளவை மிஞ்சக் கூடாது. அருகில் உள்ள கிராமங்களில் வெடிச்சத்தம் 85 டெசி பெல்ஸ் மேல் வரக்கூடாது. ஆனால் எந்த குவாரிகளும் இந்த விதிமுறையை பின்பற்றுவதில்லை.
அரசு அதிகாரிகளும் இதை கண்டு கொள்ளவில்லை. அதிக அளவில் மிக சக்தி வாய்ந்த வெடிப்பொருட்களை உபயோகிப்பதால் கிராமங்களில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டு ஆங்காங்கே விவசாய கிணறுகள் இடிந்து விழுகின்றன.
சமீபத்தில் நில அதிர்வும் உணரப்பட்டது.சுற்றுச்சூழல் மற்றும் கனிமவள விதிகளையும் முறையாக கடைபிடிக்க கோரியும் நில அதிர்விலிருந்து நமது பூமியை பாதுகாக்க கோரியும்,
விதிகளை மீறும் கல் குவாரி உரிமையாளர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரியும் வருகின்ற 23ஆம் தேதி காலை 10 மணி அளவில் புளியறையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கின்றது.
கிராம மக்களுடைய வீடுகளையும் நமது விவசாயிகளையும் பாதுகாக்கின்ற வகையில் அனைவரும் அலைகடலென திரண்டு வாரீர்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.