அறநிலையத்துறை சார்பில் 304 திருமணங்கள் – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தினார்
1 min read
304 marriages on behalf of the charity department were conducted by Chief Minister M.K.Stalin
21.10.2024
தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை சார்பில் இன்று 304 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெறுகிறது. இந்நிலையில் திருவான்மியூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் 31 ஜோடிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார். அப்போது அறநிலையத்துறை சார்பில் 4 கிராம் தங்கத் தாலி மற்றும் கட்டில், மெத்தை, பீரோ உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய ரூ.60 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை மணமக்களுக்கு வழங்கப்பட்டது. புதுமணத் தம்பதிகளுக்கு சீர்வரிசைகளை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்
இதனைத்தொடர்ந்து அந்த நிகழ்வில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
“அறநிலையத்துறை செயல்பாடுகளை உண்மையான பக்தர்கள் பாராட்டுகின்றனர். திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 3 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 226 கோவில்களில் குடமுழுக்கு நடத்தியுள்ளோம். 10 ஆயிரத்து 238 கோவில்களில் திருப்பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு 9 ஆயிரம் கோவில்களில் தற்போது பணிகள் நடந்து வருகின்றன.
பக்தியை பகல் வேஷ அரசியலுக்கு சிலர் பயன்படுத்துகின்றனர். அரசின் சாதனைகளை தடுக்கவே வழக்குகளை தொடர்கின்றனர். அனைவரின் உரிமைகளை காக்கும் அரசாக திமுக அரசு விளங்குகிறது.
தமிழில் குடமுழுக்கு, தமிழில் அர்ச்சனை, அனைத்து சாதி அர்ச்சகர் என முத்தாய்ப்பான பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கோவில்களில் அன்னதானம் திட்டம் மூலம் நாள்தோறும் 92 ஆயிரம் பேர் பசியாறுகின்றனர். கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்படாமல் இருந்த தங்க முதலீடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம்” இவ்வாறு அவர் கூறினார்.