காஷ்மீரில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை
1 min read
A terrorist ambushed with weapons was shot dead in Kashmir
21.10.2024
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாராமுல்லா மாவட்டத்தின் உரி பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டையொட்டி, பயங்கரவாதிகள் ஊடுருவ உள்ளனர் என உளவு தகவல் கிடைத்தது. இந்த முயற்சியை முறியடிக்கும் ஒரு பகுதியாக இந்திய ராணுவம் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்த பணியின்போது, அந்த பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.
அவர்கள் போலீசாரை கண்டதும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனை தொடர்ந்து உஷாரான படையினரும் பதிலடி கொடுத்தனர். இந்த சம்பவத்தில், ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த பயங்கரவாதியை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். பயங்கரவாதியிடம் இருந்து, ஏ.கே. ரக துப்பாக்கி ஒன்று, ஏ.கே. ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தும் 2 உறைகளுடன் கூடிய தோட்டாக்கள், ஏ.கே. ரக துப்பாக்கிகளுக்கான 57 குண்டுகள், 2 கைத்துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தும் மூன்று உறைகளுடன் கூடிய தோட்டாக்கள் மற்றும் பிற ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.
காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தின் ககன்கீர் பகுதியில் நேற்று மாலை நடந்த பயங்கரவாத தாக்குதலில், மருத்துவர் ஒருவர், தொழிலாளர்கள் 6 பேர் என மொத்தம் 7 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்திற்கு, முதல்-மந்திரி உமர் அப்துல்லா கண்டனம் வெளியிட்டார்.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடப்பு ஆண்டில் 3 கட்டங்களாக நடந்த சட்டசபை தேர்தலில், தேசியவாத மாநாட்டு கட்சி 42 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் 6 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ.க. 29 இடங்களில் வெற்றி பெற்றது.
10 ஆண்டுகளுக்கு பின் மற்றும் 370-வது சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த முதல் சட்டசபை தேர்தல் இதுவாகும். இதில், பெரும்பான்மை இடங்களை கைப்பற்றிய தேசியவாத மாநாட்டு கட்சியை சேர்ந்த உமர் அப்துல்லா முதல்-மந்திரியாகவும், அக்கட்சியை சேர்ந்த சுரீந்தர் குமார் சவுத்ரி, துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்று கொண்டனர்.