“காஷ்மீர் மக்களை வாழ விடுங்கள்”- பாகிஸ்தானுக்கு பரூக் அப்துல்லா வேண்டுகோள்
1 min read
Let the people of Kashmir live with dignity.. Farooq Abdullah appeals to Pakistan
21/10/2024
ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் கட்டுமானப் பணி நடைபெற்று வந்த இடத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தொழிலாளர்கள் 6 பேர், ஒரு டாக்டர் ஆகியோர் கொல்லப்பட்டனர். 5 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலை ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா கண்டித்துள்ளார். மேலும், பயங்கரவாத தாக்குதல்களை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
பயங்கரவாத தாக்குதல் விஷயத்தில் இந்தியா என்ன நடவடிக்கை எடுக்கும் என்று தெரியவில்லை, அது மத்திய அரசின் கையில் உள்ளது. இது எங்களுக்கு பெரிய பிரச்சனை. பல ஆண்டுகளாக அனுபவித்து வருகிறோம். நான் 30 வருடங்களாக இதுபோன்ற வன்முறையை பார்த்து வருகிறேன். அதை நிறுத்துங்கள் என்று பலமுறை சொல்லிவிட்டேன். ஆனால் அவர்களின் சிந்தனை அப்படியேதான் இருக்கிறது.
பேச்சுவார்த்தை எப்படி நடத்த முடியும்? நீங்கள் (பாகிஸ்தான்) எங்கள் அப்பாவி மக்களை கொன்றுவிட்டு பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறீர்கள். முதலில் படுகொலைகளை நிறுத்துங்கள்.
வாழ்வாதாரத்திற்காக இங்கு வந்து வேலை பார்த்த ஏழை தொழிலாளர்கள் கொல்லப்பட்டது வேதனையான சம்பவம். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதன் மூலம் ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தானின் உத்தரவை நிலைநாட்ட முடியும் என்று பயங்கரவாதிகள் நினைத்தால், அது தவறு.
தயவு செய்து எங்களை கண்ணியத்துடன் வாழ விடுங்கள், வளர்ச்சி அடைய அனுமதியுங்கள். எவ்வளவு காலம்தான் எங்களை கஷ்டப்படுத்துவீர்கள்? நீங்கள் (பாகிஸ்தான்) 1947-ல் பழங்குடியினரை அனுப்பி அப்பாவிகளைக் கொன்று பிரச்சினையை ஆரம்பித்தீர்கள். உங்கள் முயற்சி 75 வருடங்களாக வெற்றி பெறவில்லை என்றால், இப்போது எப்படி வெற்றி பெறுவீர்கள்? உங்கள் சொந்த நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள்.
நாங்கள் இங்கு வறுமை மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தை அகற்ற விரும்புகிறோம். அதை பயங்கரவாதத்தின் மூலம் சாதிக்க முடியாது. இது (ரத்தம் சிந்துதல்) தொடர்ந்தால் நாங்கள் எப்படி முன்னேறுவோம்? அவர்கள் (பாகிஸ்தான்) பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது, இல்லையெனில் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.