காஷ்மீர் சட்டசபை முதல் கூட்டத்தில் கடும் அமளி: சிறப்பு அந்தஸ்து ரத்தை எதிர்த்து தீர்மானம்
1 min read
Kashmir assembly first meeting: resolution against repeal of special status
14.11.2024
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள 90 சட்டசபை தொகுதிக்கு நடந்த தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. 10 வருடங்களுக்கு பிறகு காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைந்தது.
ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரியாக உமர்அப்துல்லா பதவி ஏற்றார். அவரது தலைமையில் நடந்த முதல் மந்திரிசபை கூட்டத்தில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானம் ஒப்புதலுக்காக துணை நிலை கவர்னர் மனோஜ் சின்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரும் ஒப்புதல் வழங்கி இருந்தார். இது தொடர்பாக உமா் அப்துல்லா டெல்லி சென்று பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசி இருந்தார்.
இந்த நிலையில் காஷ்மீர் சட்டசபையின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது.
தேசிய மாநாட்டு கட்சி யின் மூத்த தலைவரும், 7 முறை எம்.எல்.எ.வுமான அப்துல் ரகீம் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச சட்ட சபையின் முதல் சபாநாயகராக தேர்ந்து எடுக்கப் பட்டார்.
சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் போட்டியிட விரும்பாததால் குரல் வாக்கெடுப்பு மூலம் அவர் தேர்வானார். அப்துல் ரகீமை முதல்-மந்திரி உமர் அப்துல்லா, எதிர் கட்சி தலைவர் சுனில் சர்மா ஆகியோர் சபா நாயகர் இருக்கையில் அமர வைத்தனர். அவர் 2002 முதல் 2008 வரை பி.டி.பி-காங்கிரஸ் அரசு இருந்தபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.
அதை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் அரசியலமைப்பின் 370-வது சட்டப் பிரிவு ரத்து செய்ததை எதிர்த்தும், சிறப்பு அந்தஸ்தை வழங்க வலியுறுத்தியும் மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி) எம்.எல்.ஏ. வகீத் பாரா தீர்மானம் கொண்டு வந்தார்.
புல்வாமா எம்.எல்.ஏ. வான அவர் கூறும்போது, `ஜம்மு-காஷ்மீர் மக்களின் உணர்வுகளை மனதில் வைத்து சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை இந்த அவை எதிர்க்கிறது என்று கூறி தீர்மானத்தை முன் வைத்தார்.
இதற்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 28 எம்.எல்.ஏ.க்களும் இதற்கு எதிராக எழுந்து நின்றனர். இதனால் சபையில் கடும் அமளி ஏற்பட்டது.
சட்டசபை விதிகளை மீறி தீர்மானம் கொண்டு வந்ததற்காக வகீத் பாராவை சஸ்பெண்டு செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஷாம்லால் சர்மா கோரிக்கை வைத்தார்.
அமளிக்கு பிறகு உமர் அப்துல்லா பேசினார். அதைத் தொடர்ந்து கவர்னர் மனோஜ் சின்கா உரை ஆற்றினார்.