கட்சிக்காக தினமும் 2 மணி நேரம் ஒதுக்குங்கள் நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை
1 min read
Set aside 2 hours daily for the party CM Stalin’s advice to administrators
6.11.2024
‘குடும்பத்துக்கு நேரம் ஒதுக்குங்கள்; தொழிலை கவனியுங்கள். அதேநேரம், கட்சிக்காக தினமும் இரண்டு மணி நேரம் ஒதுக்குங்கள்’ என, கோவையில் நடந்த ஆய்வு கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாக, கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கோவை மாவட்ட தி.மு.க., நிர்வாகிகளுடனான ஆய்வு கூட்டம், போத்தனுாரில் உள்ள மண்டபத்தில் நடந்தது.
பொறுப்பு அமைச்சர் செந்தில்பாலாஜி வரவேற்றார். அமைச்சர்கள் நேரு, முத்துசாமி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் தி.மு.க., பெற்ற ஓட்டு விபரங்களை ஆய்வு செய்து வைத்திருந்த பட்டியலை ஸ்டாலின் வாசித்தார். ‘வீக்’காக உள்ள இடங்களை கோடிட்டு காட்டி, பலப்படுத்துவதற்கான பணிகளை துவக்க அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், முதல்வர் பேசியது தொடர்பாக, கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: கட்சியினர் முதலில் தங்களது குடும்பத்துக்கு நேரம் ஒதுக்க வேண்டும்; தொழில் செய்பவர்களாக இருந்தால், அதற்கும் கவனம் செலுத்த வேண்டும்.
அதே சமயம் ஒரு நாளில் இரண்டு மணி நேரம் கட்சிக்காக ஒதுக்குங்கள். வார இறுதியில் முழுமையாக ஒரு நாளை கட்சி பணிக்கு ஒதுக்குங்கள்.
தேர்தல் பணியை காகிதப்பணி, களப்பணி என இரு விதமாக செய்ய வேண்டும். ஒவ்வொரு வாக்காளரையும் நான்கு முறையாவது சந்திக்க வேண்டும். மூன்று மாதத்துக்கு ஒரு முறை, பொது உறுப்பினர் கூட்டம், பொதுக்கூட்டம், மாதம் ஒரு முறை நிர்வாகக்கூட்டம் நடத்த வேண்டும்; கட்சியினரை பேச விட்டு, அவர்களின் கருத்தை கேட்க வேண்டும் என, முதல்வர் அறிவுரை வழங்கினார்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மண்டபத்தில் இருந்து புறப்பட்டபோது, வேனில் இருந்தபடி, முதல்வர் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், ”கோவை மக்கள் பல்வேறு கோரிக்கைகள் வைத்திருக்கின்றனர். அவை நிறைவேற்றித் தரப்படும். 2026ல் மீண்டும் தி.மு.க., ஆட்சி தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் கோவை மக்களின் வரவேற்பு இருந்தது. தங்க நகை தொழில் பூங்கா அமைப்பது தொடர்பான கோரிக்கை பரிசீலிக்கப்படும். கட்சியை மாவட்ட ரீதியாக விரிவுபடுத்துவதாக இருந்தாலும், கட்சி முடிவெடுக்க வேண்டிய விஷயம்; உங்களிடம் சொல்ல முடியாது,” என்றார்.