டெல்லியில் ஜெய்சங்கருடன் சவுதிஅரேபியா வெளியுறவு மந்திரி சந்திப்பு
1 min read
Saudi Foreign Minister meets Jaishankar in Delhi
13.11.2024
சவுதிஅரேபியாவின் வெளியுறவுத்துறை மந்திரியான இளவரசர் பைசல் பின் பர்ஹான் அல் சவுத், 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். இன்று காலை டெல்லியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மத்திய மந்திரி ஜெய்சங்கரை சவுதிஅரேபியாவின் வெளியுறவு மந்திரி நேரில் சந்தித்து பேசினார்.
இதனை தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற இந்தியா-சவுதிஅரேபியா மூலோபாய கூட்டமைப்பு கவுன்சிலின் 2-வது அரசியல், சமூகம், பாதுகாப்பு மற்றும் கலாசார ஆலோசனைக் கூட்டத்தில் இருநாட்டு மந்திரிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய ஜெய்சங்கர், இந்தியா-சவுதி அரேபியா இடையிலான இருதரப்பு உறவு நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது எனவும், முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு இருநாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
சவுதி அரேபியாவில் வசிக்கும் சுமார் 26 லட்சம் இந்திய குடிமக்களின் நலன்களை பாதுகாப்பதில் சவுதி அரேபியா அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் கூறினார். மேலும் கூட்டு ராணுவ பயிற்சிகள் மூலம் இருநாட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு வலிமையடைந்து இருப்பதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டார். அதோடு, சவுதி அரேபியாவின் ‘விஷன் – 2030’ மற்றும் இந்தியாவின் ‘விக்சித் பாரத் – 2047’ ஆகிய இலக்குகளை அடைவதற்கு இரு நாட்டு தொழில் நிறுவனங்களும் தங்கள் ஒத்துழைப்பை வழங்கி வருவதாக ஜெய்சங்கர் தெரிவித்தார்.