நெல்லை, தென்காசி வழியாக தாம்பரம் ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும்
1 min read
Thambaram train should continue to run via Nellai and Tenkasi
13.11.2024
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாவூர்சத்திரம், தென்காசி வழியாக ஞாயிற்றுக்கிழமை இயக்கப்பட்ட நெல்லை – தாம்பரம் ரயிலை
கிறிஸ்மஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் நெருங்குவதால்
தொடர்ந்து இயக்க வேண்டும். என்று தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவர் பாண்டியராஜா தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த கோரிக்கை மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
நெல்லையிலிருந்து அம்பை, பாவூர்சத்திரம் தென்காசி வழியாக தாம்பரத்திற்கு இயக்கப்பட்ட நெல்லை – தாம்பரம் சிறப்பு ரயிலுக்கு பயணிகள் இடையே நல்ல வரவேற்பு இருப்பதால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்து இயக்க வேண்டும்.
தீபாவளி பண்டிகை முடிந்து ஞாயிற்றுக்கிழமை சென்னை செல்வதற்கு நெல்லையிலிருந்து அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி வழியாக சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயிலின் முன்பதிவு சில நிமிடங்களில் முடிவடைந்து பொது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.இதனால்
ரயில்வேக்கும் நல்ல வருமானத்தை கொடுத்தது. நெல்லை ரயில் நிலையத்தில் மூன்று நாட்கள் காலியாக காத்து கிடக்கும் நெல்லை – புருலியா ரயிலின் பெட்டிகளை கொண்டு இந்த சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களை சார்ந்த பொதுமக்கள் வார விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு வந்து பின்னர் ஞாயிற்றுக்கிழமை சென்னை திரும்புவதற்கு இந்த ரயில் வசதியாக இருக்கும் என்பதால் இதனைத் தொடர்ந்து இயக்க வேண்டும் என்று பயணிகள் விரும்புகின்றனர்.
மேலும் ஞாயிற்றுக்கிழமை சென்னை செல்வதற்கு நெல்லை, பொதிகை, கன்னியாகுமரி, அனந்தபுரி, செந்தூர், கொல்லம்மையில் சிலம்பு, இரு வந்தே பாரத் ரயில்கள் என அனைத்து ரயில்களிலும் இருக்கைகள் நிரம்பி தட்கல், பிரிமியம் தட்கல் என எந்த வகையிலும் டிக்கெட் கிடைப்பதில்லை. எனவே தீபாவளியை முன்னிட்டு நெல்லையில் இருந்து அம்பை பாவூர்சத்திரம் தென்காசி மதுரை வழியாக சென்னைக்கு இயக்கப்பட்ட நெல்லை – தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும்.
இதனால் தென் மாவட்ட பயணிகளுக்கு வசதியாக இருப்பதோடு தெற்கு ரயில்வேக்கும் நல்ல வருமானம் கிடைக்கும். மேலும் கிறிஸ்மஸ் ஆங்கில புத்தாண்டு பொங்கல் என வரிசையாக பண்டிகை தினங்கள் வர இருப்பதால் ரயில் பயணிகள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுவதற்கு நல் வாய்ப்பாக இருக்கும். எனவே ஞாயிற்றுக்கிழமைகளில் நெல்லையிலிருந்து பாவூர்சத்திரம் தென்காசி வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவர் பாண்டியராஜா அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.