கிண்டி ஆஸ்பத்திரியில் நோயாளி சாவு – டாக்டர்கள் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு
1 min read
Patient dies in Kindy hospital – Relatives quarrel
15.11.2024
சென்னை பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் வயிற்று வலி காரணமாக நேற்று இரவு கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் பித்தப்பை கல் பிரச்சினை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று நள்ளிரவில் அவர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் இன்று அதிகாலையில் திடீரென விக்னேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மருத்துவர்கள் பணியில் இல்லாததே விக்னேஷின் உயிரிழப்புக்கு காரணம் என்று கூறி அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விக்னேஷின் உறவினர்களுடன் கிண்டி காவல் ஆய்வாளர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதையடுத்து அவர்கள் அமைதியாகினர்.
இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மருத்துவமனை நிர்வாகம், “தனியார் மருத்துவமனையில் பித்தப்பை கல் சிகிச்சை பெற்று, நோய் தீவிரத்துடன் சிகிச்சையை தொடர முடியாத நிலையில் இளைஞர் விக்னேஷ் அனுமதிக்கப்பட்டார். விக்னேஷ் அழைத்து வரப்பட்ட அன்று அனைத்து மருத்துவர்களும் பணியில் இருந்தனர்.
குடல் நோய் வார்டில் அனுமதிக்கப்பட்ட அவர் அவசர பிரிவுக்கு மாற்றப்பட்டு அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. விக்னேசுக்கு முறையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டபோதும் அவர் உயிரிழந்தார்” என்று தெரிவித்துள்ளது.”