இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்பு-புதிய அமைச்சர்கள் நியமனம்
1 min read
Harini Amarasuriya sworn in as Sri Lankan Prime Minister-New Ministers appointed
18.11.2023
இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட அனுரா குமார திசநாயகா வெற்றிபெற்று அதிபரானார்.
அந்த சமயத்தில் இலங்கை பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு 3 எம்.பி.க்கள் மட்டுமே இருந்ததால் அவர் பாராளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்டார். இடைக்கால பிரதமராக பெண் எம்.பி. ஹரிணி அமரசூரியாவை நியமித்தார்.
இந்த நிலையில் 225 இடங்களைக் கொண்ட இலங்கை பாராளுமன்றத்துக்கு கடந்த வியாழக்கிழமை தேர்தல் நடந்தது. இதில் 159 இடங்களைக் கைப்பற்றி தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 3-ல் இரண்டு பங்கு இடங்களைக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.
இந்த நிலையில் இலங்கையின் புதிய பிரதமர் மற்றும் மந்திரி சபையை அதிபர் திசநாயகா இன்று (திங்கட்கிழமை) நியமிப்பார் என்று தேசிய மக்கள் சக்தி கூட்டணி அறிவித்தது.
இந்நிலையில் இலங்கை பாராளுமன்றத்தில் புதிய பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு நடந்தது. அதன்படி இலங்கையின் புதிய பிரதமராக தற்போதைய தற்காலிக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார். அதிபர் அனுரா குமார திசநாயகா முன்னிலையில் பிரதமர் மற்றும் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளனர்.
கடல்தொழில் நீரியல் வழங்கல் அமைச்சராக ராமலிங்கம் சந்திரசேகரன் பதவியேற்றார். அதிபர் முன்னிலையில் அவருக்கு தமிழில் பதவிப்பிரமாணம் நடந்தது. இலங்கை வெளிவிவகார துறை அமைச்சராக விஜித் ஹேரத் பதவியேற்றார். மகளிர் மற்றும் சிறுவர் நலத்துறை அமைச்சராக சரோஜா சாவித்திரி பால்ராஜ் பதவியேற்றார். இலங்கையின் 10-வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் 21-ந் தேதி தொடங்குகிறது