அரசு பஸ்களில் முன்பதிவு காலம் 90 நாட்களாக அதிகரிப்பு
1 min read
Increase in reservation period for government buses from 60 days to 90 days
18.11.2024
தமிழகத்தில் தொலைதூர நகரங்களுக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பண்டிகை மற்றும் வார விடுமுறை நாட்களில் பஸ்களில் டிக்கெட் அவ்வளவு எளிதில் கிடைப்பது இல்லை. கண்ணை மூடி திறப்பதற்குள் டிக்கெட்டுகள் காலியாகி விடுகின்றன.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பஸ்களில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு காலம் 60 நாட்களில் இருந்து 90 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி இன்று மதியம் 12 மணி முதல் அமலுக்கு வருவதாக அரசு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பஸ்களில் இனி 90 நாட்களுக்கு முன்பே ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். பயணிகளிடமிருந்து கிடைத்த கருத்துக்களின் அடிப்படையில், பயணிகள் நீண்ட காலத்திற்கு முன்பே பயணத் திட்டமிடலுக்கு ஏதுவாக, தற்போது நடைமுறையில் உள்ள 60 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யலாம் என்பதனை 90 நாட்கள் என உயர்த்தி இன்று மதியம் 12 மணி முதல் அமல்படுத்தப்படுகிறது.
பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் TNSTC அதிகாரபூர்வ மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து சிரமமின்றி பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.