தமிழகம் வந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு வரவேற்பு
1 min read
President Draupadi Murmu arrived in Tamil Nadu
27.11.2024
ஜனாதிபதி திரவுபதி முர்மு நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல் நவம்பர் 30-ம் தேதி வரை தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக 4 நாட்கள் அரசு முறைப் பயணமாக இன்று (நவ.27) நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
டெல்லியில் இன்று காலை விமானம் மூலம் புறப்பட்டு கோவை விமான நிலையம் வந்தடைந்த அவர், ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நீலகிரி மலையில் நிலவும் கடும் மேகமூட்டத்தின் காரணமாக கோவையில் இருந்து கார் மூலம் கோத்தகிரி வழியாக உதகை புறப்பட்டுச் சென்றார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் ராணுவ பயிற்சிக் கல்லூரியில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, உதகையில் உள்ள கவர்னர் மாளிகையில் பழங்குடியினப் பெண்களுடன் உரையாடல் நடத்துகிறார். மேலும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் அவர் கலந்துகொள்ள இருத்கிறார். பின்னர் திருச்சி விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையையொட்டி குன்னூர் ராணுவ முகாமில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஜனாதிபதி வருகையையொட்டி நீலகிரியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.