அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன் ஜெய்சங்கர் சந்திப்பு
1 min read
Union Minister Jaishankar meets leaders of countries including the US and Italy
27.11.2024
இத்தாலி நாட்டின் பியுக்கி நகரில் ஜி7 வெளியுறவு துறை மந்திரிகளின் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக, மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் அந்நாட்டுக்கு சென்றிருக்கிறார். இதேபோன்று, அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வெளியுறவு துறை மந்திரிகளும் அந்நாட்டிற்கு சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து, இத்தாலியின் துணை பிரதமர் மற்றும் வெளியுறவு மந்திரியான ஆன்டனியோ தஜானியை, மத்திய மந்திரி ஜெய்சங்கர் நேரில் சந்தித்து பேசினார். இதுபற்றி எக்ஸ் சமூக ஊடக பதிவில் குறிப்பிட்ட அவர், இத்தாலியின் துணை பிரதமர் மற்றும் வெளியுறவு மந்திரியான ஆன்டனியோ தஜானியுடன் சிறந்த முறையில் சந்திப்பு நடந்தது.
இந்த சந்திப்பில், தொழில் நுட்பம், புதிய கண்டுபிடிப்பு, பசுமை எரிசக்தி, உரம், ரெயில்வே மற்றும் முதலீடுகள் ஆகியவற்றில் உள்ள வாய்ப்புகள் பற்றி விவாதிக்கப்பட்டன. இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய பொருளாதார வழித்தடம், உக்ரைன் மற்றும் இந்தோ-பசிபிக் உள்ளிட்ட விவகாரங்களை பற்றிய இரு நாடுகளின் பார்வைகள் பரிமாறி கொள்ளப்பட்டன.
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட கூட்டு மூலோபாய செயல் திட்டம், எங்களுடைய நடவடிக்கைகளுக்கு வழிகாட்டியாக இருக்கும். 2025-ம் ஆண்டிற்கான அவருடைய இந்திய வருகையை நாங்கள் எதிர்பார்த்து இருக்கிறோம் என பதிவிட்டு உள்ளார்.
இதேபோன்று அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி அந்தோணி பிளிங்கன், மத்திய மந்திரி ஜெய்சங்கர் உடனான சந்திப்பு பற்றிய விரிவான விவரங்களை எக்ஸ் சமூக ஊடக பதிவில் பகிர்ந்து கொண்டார்.
அதில், நாங்கள் இணைந்து பணியாற்றும்போது அமெரிக்காவும், இந்தியாவும் வலிமையாக இருக்கும். இத்தாலியில் மத்திய மந்திரி ஜெய்சங்கரும், நானும் சந்தித்து பேசினோம். உலகளாவிய பாதுகாப்பு மற்றும் வளம் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கு நெருங்கிய ஒத்துழைப்புடன் தொடர்ந்து பணியாற்ற வேண்டியதன் அவசியம் பற்றி நாங்கள் ஆலோசனை மேற்கொண்டோம் என்று அவர் தெரிவித்து உள்ளார்.
இதேபோன்று, தென்கொரிய வெளியுறவு துறை மந்திரி சோ டே-யுல் மற்றும் ஜப்பான் வெளியுறவு துறை மந்திரி தகேஷி இவாயா ஆகியோரை மத்திய மந்திரி ஜெய்சங்கர் நேரில் சந்தித்து பேசினார்.