திருப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகொலை
1 min read
3 members of the same family murdered in Tiruppur
29/11/2024
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேமலைகவுண்டம்பாளையம் கிராமத்தில் தெய்வ சிகாமணி, அலமாத்தாள் என்ற வயதான தம்பதி தங்களது தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர். இவர்களது மகன் செந்தில் குமார். ஐ.டி. ஊழியரான இவர் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் கோவையில் வசித்து வந்தார்.
இந்நிலையில் தனது உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக நேற்று செந்தில்குமார் தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார். நேற்று செந்தில்குமார் தனது தாய் மற்றும் தந்தையுடன் தோட்டத்து வீட்டில் இருந்துள்ளார். அங்கு வந்த மர்ம நபர்கள் 3 பேரையும் படுகொலை செய்துள்ளனர். இன்று காலையில் அவர்களது வீட்டுக்கு சென்ற சவரத் தொழிலாளி ஒருவர், மூவரும் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக அவர் அவிநாசிபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் கொலை நடந்த இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் நகைக்காக மூவரும் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் மாநகர காவல் ஆணையர் லட்சுமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது:-
பல்லடத்தில் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து 6 முதல் 7 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கூர்மையான ஆயுதத்தை கொண்டு மூவரையும் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தை ஒருவர் செய்திருக்க வாய்ப்பில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை பிடிக்க தமிழகம் முழுவதும் வாகன சோதனை செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.