July 11, 2025

Seithi Saral

Tamil News Channel

‘சிறுபான்மையினரை வங்காளதேச அரசு பாதுகாக்க வேண்டும்’ – இந்தியா வலியுறுத்தல்

1 min read

‘Bangladesh government must protect minorities’ – India insists

29.11.2024
வங்காளதேசத்தில் நடந்த மாணவர் போராட்டம் வன்முறையாக மாறியதை தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 5-ந்தேதி பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசினா நாட்டை விட்டு வெளியேறினார். அதனை தொடர்ந்து வங்காளதேசத்தின் இடைக்கால பிரதமராக முகமது யூனுஸ் பதவியேற்ற நிலையில், அங்குள்ள சிறுபான்மை மக்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
வங்காளதேசத்தில் உள்ள இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசுக்கு இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனிடையே வங்காளதேசத்தின் தேசிய கொடியை அவமதித்ததாக கூறி, அந்நாட்டில் உள்ள இந்து மத அமைப்பின் தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து வங்காளதேசத்தில் உள்ள இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், வங்காளதேசத்தில் இந்து மத தலைவர் மீதான கைது நடவடிக்கை கவலையளிப்பதாகவும், அந்நாட்டில் உள்ள இந்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வங்காளதேச இடைக்கால அரசாங்கத்தை கேட்டுக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சிறுபான்மையினரை பாதுகாக்கும் பொறுப்பை வங்காளதேச அரசு நிறைவேற்ற வேண்டும் என இந்தியா அரசு வலியுறுத்தியுள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-
“இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. வங்காளதேச இடைக்கால அரசாங்கம் அங்குள்ள அனைத்து சிறுபான்மையினரையும் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்.

வங்காளதேசத்தில் பயங்கரவாத சொற்பொழிவுகள், வன்முறை சம்பவங்கள் மற்றும் மோதல்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. இந்த நிகழ்வுகளை ஊடகங்களின் மிகைப்படுத்தல் என்று ஒதுக்கிவிட முடியாது. சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு வங்காளதேசத்தை மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறோம்.

இந்து மத தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்ட வழக்கில், சட்டப்பூர்வ நடவடிக்கைகள் அனைத்தும் பின்பற்றப்படுவதை இந்தியா கவனித்து வருகிறது. இந்த வழக்கு நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் கையாளப்படும் என்றும், சம்பந்தப்பட்ட அனைவரின் சட்ட உரிமைகளுக்கும் மதிப்பு அளிக்கப்படும் என்றும் நம்புகிறோம்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.