July 11, 2025

Seithi Saral

Tamil News Channel

முதல்-அமைச்சர் தலைமையில் பல்வேறு துறைகள் சார்ந்த ஆய்வுக் கூட்டம்

1 min read

Chief Minister chairs multi-sectoral review meeting

29.11.2024
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆகிய துறைகளின் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (29.11.2024) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை-உழவர் நலத்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆகிய துறைகளின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 2021-22 முதல் 2024-25 ஆம் ஆண்டுகள் வரை வேளாண்மை-உழவர் நலத்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆகிய துறைகளின் சார்பில் வெளியிடப்பட்ட மானியக் கோரிக்கை அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்து முதல்-அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில், வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரில் நெய்தல் பாரம்பரிய பூங்கா அமைக்கும் பணிகள், ஈரோடு மாவட்டத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மஞ்சள் ஏற்றுமதி மையம் தரம் உயர்த்தும் பணிகள், தருமபுரி மாவட்டத்தில் மா மகத்துவ மையமும், திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லி மகத்துவ மையமும் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் பணிகள், தூத்துக்குடி மாவட்டம், கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரியில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாழை ஆராய்ச்சி நிலையம் அமைக்கும் பணிகள், தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தின் கீழ் 65 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள், போன்ற பல்வேறு பணிகளின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், உலக அளவில் போற்றப்படும் தமிழ்ப் படைப்புகளை வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் பணிகள், தமிழில் முதல் நாவல் எழுதிய மாயூரம் முன்சீப் வேதநாயகம் அவர்களுக்கு மயிலாடுதுறையில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரங்கம் மற்றும் சிலை அமைக்கும் பணிகள், தண்டையார்பேட்டை – காமராஜர் நகரில் உள்ள அரசு அச்சக பணியாளர்களுக்கான குடியிருப்புகளை இடித்துவிட்டு 34.54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய குடியிருப்புகள் கட்டும் பணிகள், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனார் அவர்களுக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கும் பணி, கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் பெரியவர் இளையபெருமாள் அவர்களுக்கு நூற்றாண்டு நினைவரங்கம் அமைக்கும் பணி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள் போன்ற பல்வேறு பணிகளின் முன்னேற்றம் குறித்து முதல்-அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்துடன் இணைந்து, சென்னை, காசிமேட்டில் உள்ள மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்தும் பணிகள், கடலூர் மாவட்டம், பெரியகுப்பம், புதுக்குப்பம் மற்றும் சி. புதுப்பேட்டை ஆகிய கடலோர கிராமங்களில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடல் அரிப்பு தடுப்பு சுவர்களுடன் கூடிய புதிய மீன் இறங்குதளங்கள் அமைக்கும் பணிகள், சென்னை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் 50 கோடி ரூபாய் செலவில் நவீன மீன்சந்தைகள் அமைக்கும் பணிகள், அம்பத்தூர் பால் பண்ணையில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பால் பொருட்கள், சிப்பம் கட்டும் பொருட்கள் மற்றும் மூலப் பொருட்களுக்கான ஆராய்ச்சி மற்றும் உருவாக்கம், நுண்ணுயிரியல் பகுப்பாய்வு ஆய்வுக்கூடம் அமைக்கும் பணிகள், நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 2 லட்சம் லிட்டர் பாலை பதப்படுத்தும் பால் பண்ணை மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும் ஆலை அமைக்கும் பணிகள் போன்ற பல்வேறு பணிகளின் முன்னேற்றம் குறித்து முதல்-அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், கடந்த ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வரும் பணிகளை துரிதமாக முடித்திட வேண்டும் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில், வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பால்வளம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், துறை செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.