வேலைக்காக இந்து என கூறுவது அரசியலமைப்பு மீதான மோசடி: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
1 min read
Claiming to be Hindu for work is a violation of the Constitution: Supreme Court verdict
29.11.2024
புதுச்சேரியைச் சேர்ந்த சி.செல்வராணி என்பவரது தந்தை இந்து பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர். அவரது தாயார் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். செல்வராணி தேவாலயத்தில் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், 2015-ம் ஆண்டு புதுச்சேரி மாநில அரசின் கிளார்க் பணியிடத்துக்காக பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் எனக்கூறி விண்ணப்பித்து தேர்ச்சி பெற்றார். பின்னர் சாதிச் சான்றிதழ் சரிபார்ப்பின்போது அவர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் தனக்கு தனது தந்தையின் இந்து மதத்தின் அடிப்படையில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என சாதி சான்றிதழ் வழங்கும்படி கோரியுள்ளார். அவரது விண்ணப்பத்தை அதிகாரிகள் நிராகரித்தனர்.
இதை எதிர்த்து அவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இடஒதுக்கீட்டு சலுகைகளைப் பெறுவதற்காக மதம் மாறுபவர்களுக்கு இதுபோல சாதிச் சான்றிதழ் வழங்க முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து செல்வராணி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்ததுடன், செல்வராணியின் வழக்கை தள்ளுபடி செய்தது.
மனுதாரர் கிறிஸ்தவ மதத்தை தீவிரமாக கடைப்பிடிக்கும்போது, அரசு வேலைவாய்ப்புக்காக இந்துவாக தன்னை அடையாளப்படுத்த முற்படுவதை ஏற்க முடியாது என்றும், அது அரசியலமைப்பு சட்டத்தையே மோசடி செய்வதற்கு சமம் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
மதமாற்றத்தின் நோக்கம் பிற மதத்தின் மீது உண்மையான நம்பிக்கை இல்லாமல், இடஒதுக்கீட்டின் பலனைப் பெறுவதற்காக மட்டுமே இருந்தால், அதை அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.