வீடு புகுந்து கொலை: சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக அண்ணாமலை கண்டனம்
1 min read
Housebreaking and murder: Annamalai condemns law and order breakdown
29.11.2024
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சேமலைகவுண்டம்பாளையத்தில், தாய், தந்தை, மகன் என ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.
கடந்த ஆண்டும் பல்லடம் பகுதியில், இதே போன்று வீட்டில் புகுந்து ஒரே குடும்பத்தில் நான்கு பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடியாதபடி காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருப்பதால், தமிழகத்தில், சிறிதும் பயமின்றி வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்கு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. காவல்துறைக்குப் பொறுப்பான முதல்-அமைச்சரோ, இது குறித்து எந்தக் கவலையும் இன்றி இருக்கிறார்.
மாநில அரசின் முழுமுதற் பணியான சட்டம் ஒழுங்கைக் காக்க இயலாத திமுக அரசால், பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குரியதாக இருக்கிறது. எதிர்க்கட்சியினரையும், அரசை விமர்சிப்பவர்களையும் கைது செய்ய மட்டுமே காவல்துறையைப் பயன்படுத்தாமல், அவர்கள் பணியைச் சுதந்திரமாகச் செய்ய அனுமதித்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.