டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மேலூர் மக்களுக்கு துணை நிற்போம் – எடப்பாடி பழனிசாமி பதிவு
1 min read
We will support the people of Melur in the tungsten mining issue – Edappadi Palaniswami posts
29.11.2024
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்குட்பட்ட அரிட்டாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 2015 ஏக்கர் பரப்பளவிலான பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது.
தமிழ்நாட்டின் சிறந்த பல்லுயிர் வாழிடப் பகுதிகளில் ஒன்றான அரிட்டாப்பட்டி பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி ஆகும். அரிட்டாபட்டி , மீனாட்சிபுரம் ஆகிய கிராமங்களில் இருக்கும் 193.215 ஹெக்டேர் பரப்பளவுள்ள பகுதிகளை பல்லுயிர் பாரம்பரிய தலமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஏழு சிறிய குன்றுகள் இந்தத் தலத்துக்குள் அடங்குகின்றன. இவை 250 வகையான பறவைகளுக்கு வாழ்விடமாக உள்ளன. தனித்துவம் மிக்க இந்த மலைப்பரப்பு 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்றுக் குளங்களுக்கான ஆதாரமாக திகழ்கிறது. இப்பகுதியில், 2,200 ஆண்டுகள் பழமையான தமிழ் எழுத்துக் கல்வெட்டுகள், சமணர் படுக்கைகள் மற்றும் குடைவரை கோவில்கள் ஆகியவையும் உள்ளன.
அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட்டால் அங்குள்ள பல்லுயிர் வாழிடங்களும், புராதனப் பெருமை மிக்க சின்னங்களும் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விடும் எனக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இந்த முயற்சிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில்,
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது:-
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாப்பட்டி-நாயக்கர்பட்டியில் வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் இன்று கடையடைப்பு போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் மீதோ, அவர்கள் சார்பில் கொடுக்கப்படும் வாக்குறுதிகளின் மீதோ மக்களுக்கு துளியும் நம்பிக்கை என்பது கிடையாது.
மேலூர் பொதுமக்களின் தொடர் போராட்டங்களுக்கு அதிமுக என்றும் துணைநிற்கும். அஇஅதிமுக சார்பில் மாவட்டக் கழகச் செயலாளரும் , சட்டமன்ற உறுப்பினரும் தொடர்ந்து அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொள்வார்கள். பொதுமக்களின் உணர்வுகளையும், தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் தளமான அரிட்டாபட்டி பாதிக்கப்படுவதையும் கருத்திற்கொண்டு,
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அளித்த அனுமதியைத் திரும்பப் பெறுமாறு மத்திய அரசையும், உரிய நடவடிக்கை எடுக்குமாறு மு.க.ஸ்டாலினின் திமுக அரசையும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.