அதானி குழுமத்துக்கு இலங்கை, தான்சானியா, சா்வதேச கூட்டு நிறுவனங்கள் ஆதரவு
1 min read
Adani Group receives support from Sri Lankan, Tanzanian, and international consortiums
30.11.2024
அதானி குழுமத்துக்கான ஆதரவை இலங்கை, தான்சானியா மற்றும் அபுதாபியின் ‘இன்டா்நேஷனல் ஹோல்டிங் கம்பெனி (ஐ.எச்.சி.)’ முதலீட்டு மேலாண்மை நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்தியாவில் ‘அதானி கிரீன் எனா்ஜி’ நிறுவனம் விநியோகித்த சூரிய மின்சக்தியை வாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் அளிக்கப்பட்டதை மறைத்து, அமெரிக்க முதலீட்டாளா்களிடம் நிதி திரட்டியதாக தொழிலதிபா் கௌதம் அதானி, நிறுவனத்தின் இயக்குநா்கள் சாகா் அதானி, வினீத் ஜெயின் ஆகியோர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இக்குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கடந்த வாரமே மறுத்துவிட்ட அதானி குழுமம், ‘அமெரிக்காவில் கௌதம் அதானி மற்றும் பிறா் மீது லஞ்ச குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை’ என்று புதன்கிழமை மீண்டும் விளக்கமளித்தது.
இந்நிலையில், அதானி குழுமத்தின் முக்கிய வெளிநாட்டு முதலீட்டாளா்களில் ஒருவரான ஐ.எச்.சி. வெளியிட்ட அறிக்கையில், ‘பசுமை எரிசக்தி மற்றும் நிலைத்தன்மை துறைகளில் அதானி குழுமத்தின் பங்களிப்பு மீதான நம்பிக்கையை அவா்களுடனான எங்களின் கூட்டாண்மை பிரதிபலிக்கிறது. அதானி நிறுவனத்தில் செய்யப்பட்டுள்ள எங்கள் முதலீடுகளில் பின்வாங்கவில்லை’ என குறிப்பிட்டுள்ளது.
இலங்கை, தான்சானியா ஆதரவு
இலங்கையில் கொழும்பு துறைமுக உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதில் அதானி குழுமத்துடனான ஒத்துழைப்பில் அந்நாட்டு துறைமுக ஆணையம் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது.
மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீடாக 100 கோடி டாலா் மதிப்பீட்டில் மேற்கொள்ளும் இத்திட்டத்தை ரத்து செய்வது குறித்து எந்த விவாதமும் இல்லை என்று துறைமுக ஆணையத் தலைவா் சிறீமேவன் ரணசிங்க திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதேபோல், ‘அதானி போர்ட்ஸ்’ நிறுவனத்துடனான ஒப்பந்தங்கள் தொடரும் என்று தான்சானிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்க குற்றச்சாட்டைத் தொடா்ந்து, அதானி குழுமத்துடனான விமான நிலைய விரிவாக்கம் மற்றும் எரிசக்தி ஒப்பந்தங்களை கென்யா அரசு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.