சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ‘ரெட் அலர்ட்’
1 min read
‘Red alert’ for 7 districts including Chennai today and tomorrow
30.11.2024
வங்கக்கடலில் நேற்று உருவான ‘பெஞ்சல்’ புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று இரவுக்குள் கரையை கடக்கும் எனவும், இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கனமழை வரை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில் உள்ள மாநில அவசரகால கட்டுப்பாடு மையத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி வாயிலாகவும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருடனும் புயல் மற்றும் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில், வானிலை மையத்தின் சார்பில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய 7 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே போல் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.