டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் – அன்புமணி கேள்வி
1 min read
Tamil Nadu government’s double role in tungsten mining issue – Anbumani questions
30.11.2024
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்குட்பட்ட அரிட்டாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 2,015 ஏக்கர் பரப்பளவிலான பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசின் இரட்டை வேடத்தை மத்திய அரசு அம்பலப்படுத்தியுள்ளது. டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒருபுறம் அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கிவிட்டு, இன்னொரு புறம் அதை எதிர்ப்பது போல, திராவிட மாடல் அரசு நடத்தும் பிள்ளையை கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் நாடகத்தை தமிழ்நாட்டு மக்கள் நம்ப மாட்டார்கள்.
அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும், அத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதிய நிலையில், அது குறித்த சில விவரங்களை மத்திய சுரங்கத்துறை வெளியிட்டுள்ளது.
“அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்கம் ஏலத்தில் விடப்படுவதற்கு முன்பாக தமிழக அரசிடமிருந்து சில உள்ளீடுகள் பெறப்பட்டன. டங்ஸ்டன் சுரங்கத்தை ஏலத்தில் விடுவதற்கு வசதியாக அப்பகுதியில் உள்ள 47.37 ஹெக்டேர் பரப்பளவிலான கிரானைட் சுரங்கத்திற்கான குத்தகையை தமிழக அரசின் டாமின் நிறுவனம் திரும்ப ஒப்படைத்து விட்டது. ஏல நடவடிக்கை தொடங்கிய கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட 07.11.2024-ம் தேதி வரை டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எந்த எதிர்ப்பும் வரவில்லை. டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் விடப்படுவதை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசிடமிருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை” என்று மத்திய அரசு கூறியிருக்கிறது.
டங்ஸ்டன் சுரங்கம் ஏலத்தில் விடப்படுவது குறித்த விவரங்களை தமிழக அரசுக்கு மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்திருக்கிறது. அப்போதெல்லாம் எந்த எதிர்ப்பையும் தமிழக அரசு தெரிவிக்கவில்லை. இன்னும் கேட்டால் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தமிழக அரசே டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு கடந்த ஆண்டே மத்திய அரசின் அனுமதியை தமிழக அரசு கோரியிருக்கிறது. இப்படியாக அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு அனைத்து வழிகளிலும் துணை போன திராவிட மாடல் அரசு இப்போது மக்களிடம் கடுமையான எதிர்ப்பு எழுந்தபிறகு அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதைப் போல நாடகமாடுகிறது.