விழுப்புரத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட வந்த அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம்
1 min read
Public argues with officials who came to inspect flood damage in Villupuram
1.12.2024
விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம், மயிலம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பெய்த பலத்த மழையின் காரணமாக, அங்குள்ள பல்வேறு குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. குறிப்பாக கோட்டகுப்பம் ஜமியத் நகர் பகுதியில் பல இடங்களில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அங்குள்ள மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமலும், உணவு மற்றும் தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமலும் அவதியடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி, கூடுதல் ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் வெள்ள பாதுப்புகளை பார்வையிட ஜமியத் நகர் பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்டு நிவாரண முகாமிற்கு அனுப்பி வைக்கும் பணிகளை மேற்கொண்டனர். மேலும் அங்குள்ள மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது தங்கள் பகுதிக்கு மீட்பு படையினர் யாரும் வரவில்லை என்றும், தாங்களாகவே தன்னார்வலர்கள் மூலம் மீட்பு பணிகளை மேற்கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்த அதிகாரிகள், அவர்களின் தேவைகளை நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.