நடுக்கடலில் மாயமான தூத்துக்குடி மீனவர்கள் 6 பேர் மீட்பு
1 min read
Thoothukudi: 6 fishermen who went missing in the middle of the sea rescued
1.12.2024
தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர், தனது நாட்டுப்படகில் அதே ஊரைச் சேர்ந்த விக்னேஷ், அல்போன்ஸ், ஜூடு, சுதர்சன், ஜார்ஜ் ஆகியோருடன் கடந்த 21-ந் தேதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்.
இவர்கள் ராமேசுவரம், பாம்பன் கடல் பகுதியில் இருந்து சுமார் 30 கடல் மைல் தொலைவில் கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். இவர்கள் 6 பேரும் கடந்த 26-ந் தேதி கரைக்கு திரும்பி வர வேண்டும். ஆனால் நேற்று வரை அவர்கள் திரும்பி வரவில்லை.
மேலும் இவர்கள் எந்த பகுதியில் இருக்கிறார்கள் என தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. அவர்களது படகில் இருந்த தொலை தொடர்பு கருவிகளும் வேலை செய்யவில்லை என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி சங்கம் சார்பில் தூத்துக்குடி மீன்வளத்துறை, மாவட்ட நிர்வாகம், மரைன் போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு படை ஆகியோருக்கு புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து கடலோர பாதுகாப்பு படை கப்பல்கள் மூலம் மாயமான மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், நடுக்கடலில் மாயமான மீனவர்கள் 6 பேர் தற்போது பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். சர்வதேச கடல்பகுதி அருகே அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 3 மணி நேரத்தில் அவர்கள் தூத்துக்குடி திரும்புவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.