புதுச்சேரியில் குடும்ப அட்டைகளுக்கு ரூ.5,000 மழை நிவாரணம்: முதல்-அமைச்சர் அறிவிப்பு
1 min read
Rs. 5,000 rain relief for family cards in Puducherry: Chief Minister’s announcement
2.12.2024
வங்கக்கடலில் உருவான பெஞ்சல் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி-மரக்காணம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்க தொடங்கியதில் இருந்து புதுச்சேரியில் மழை வெளுத்து வாங்கியது. புதுச்சேரி நகர பகுதி மட்டுமல்லாமல் பாகூர், வில்லியனூர், அரியாங்குப்பம், மணவெளி, திருபுவனை, திருக்கனூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. காணும் இடங்கள் எல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.
மழைநீர் சூழ்ந்த பகுதிகளுக்கு படகுகளில் சென்று, வீடுகளில் தத்தளித்த முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகளை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு வந்தனர். படகுகள் செல்ல முடியாத பகுதிகளில் பொக்லைன் எந்திரம் மூலம் பொதுமக்கள் மீட்கப்பட்டனர். அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டு, பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், புதுச்சேரியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.5,000 வழங்கப்படும் என்று அம்மாநில முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.