July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

பெஞ்சல் புயல் பாதிப்பாக ரேஷன் கார்டுக்கு ரூ.2 ஆயிரம் – தமிழக அரசு அறிவிப்பு

1 min read

Tamil Nadu government announces Rs. 2,000 for ration cards due to Cyclone Penjal

3.12.2024
பெஞ்சல் புயலின் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ள மாவட்ட மக்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரண உதவிகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் நவம்பர் 30 முதல் வீசத் தொடங்கிய பெஞ்சல் புயலின் காரணமாக பரவலான மற்றும் கடுமையான மழைப்பொழிவு தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் பெறப்பட்டது. குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழையின் அளவு வழக்கத்தைவிட மிக அதிகமாக இருந்தது.
இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் மழைப் பொழிவு ஏற்பட்டு, பொது மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதோடு, தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் பெரும்பகுதி விளைநிலங்களை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது. அத்துடன், மேற்படி மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள், பாலங்கள், மின் கம்பங்கள், மின்மாற்றிகள், பொதுக் கட்டிடங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளும் மற்றும் பொது மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.
அங்கு பெஞ்சல் புயலின் தாக்கத்தையும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளையும் நேரில் ஆய்வு செய்திட நேற்றையதினம் தமிழ்நாடு முதல்-அமைச்சர் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, பொது மக்கள் மற்றும் அலுவலர்களிடம் பாதிப்பு விவரங்களையும், மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்து, தேவையான அறிவுரைகளை வழங்கினார்.
துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர் பெருமக்களும் இம்மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இன்றும் நேரடியாக சென்று நிவாரண நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து துரிதப்படுத்தி வருகின்றார்கள்.

இந்நிலையில், இன்று (3-12-2024) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு வரும் துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர் பெருமக்களை காணொலி வாயிலாகத் தொடர்பு கொண்டு தற்போதைய நிலையைக் கேட்டறிந்தார்.

பின்னர், பெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையில் இன்று (3-12-2024) நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பின்வரும் நிவாரண உதவிகள் வழங்குவதென்று முடிவு செய்யப்பட்டது:

  • புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக 5 லட்சம் ரூபாய் வழங்கிடவும்,
  • சேதமடைந்த குடிசைகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கிடவும்,
  • முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவதற்கு முன்னுரிமை அளித்திடவும்,
  • மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 17 ஆயிரம் வழங்கிடவும்,
  • பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் (Perennial crops and trees) சேதமுற்றிருப்பின் (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 22,500/- வழங்கிடவும்,
  • மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8,500/-ஆக வழங்கிடவும்,
  • எருது , பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.37,500/-ஆக வழங்கிடவும்,
  • வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.4,000/- வழங்கிடவும், கோழி உயிரிழப்பு நிவாரணமாக ரூ.100/- வழங்கிடவும்,
  • அதி கனமழையின் காரணமாக கடுமையான மழைப்பொழிவினை சந்தித்துள்ள விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கிடவும்,
  • மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சான்றிதழ்கள், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு, சிறப்பு முகாம்கள் நடத்தி புதிய சான்றிதழ்கள் வழங்கிடவும்,
  • மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதிப்புக்குள்ளான குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கிடவும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

நிவாரணம் வழங்குவது தொடர்பாக தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்ட கலெக்டர்கள் தங்கள் மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளின் விவரங்களை அரசுக்கு அனுப்பி வைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.