2 பேர் சாவு: பல்லாவரத்தில் குடிநீர் குழாய்களை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்
1 min read
2 people die: Work to clean drinking water pipes in Pallavaram intensifies
6/12/2-024
சென்னை பல்லாவரம் அருகே தாம்பரம் மாநகராட்சியின் 13-வது வார்டு பகுதியில் கழிவுநீர் கலந்த நீரை குடித்த பொதுமக்களுக்கு வாந்தி, பேதி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 23 பேர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்ததாகவும் பொதுமக்கள் முன்வைத்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக அந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன், “குடிநீரால் பாதிப்பு ஏற்பட்டதாக தெரியவில்லை. உட்கொண்ட உணவில் ஏதேனும் பிரச்சினையா என விசாரணை நடத்தி வருகிறோம். சம்பந்தப்பட்ட இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், பல்லாவரம் அருகே தாம்பரம் மாநகராட்சியின் 13-வது வார்டு பகுதியில் குடிநீர் பகிர்மான குழாய்களை தூய்மைப்படுத்தும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். கண்ணபிரான் தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முழுவதுமாக தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.
காமராஜ் நகர் பகுதியில் குடிநீர் விநியோகம் மூன்று நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் பகிர்மான குழாய்களில் குளோரின் பவுடர் போடப்பட்டு வருகிறது. வீடு வீடாக சென்று நோய் தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் காமராஜ் நகர் பகுதியில் குடிநீர் விநியோகம் செய்த 2 தனியார் லாரிகள் குறித்து மாநகராட்சி ஊழியர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.