மத்தியப் பிரதேசம்: பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்று தப்பியோடிய மாணவன்
1 min read
Madhya Pradesh: Student shoots school principal dead and flees!
26.12.2024
மத்தியப் பிரதேசத்தில் பள்ளியின் முதல்வரை 12ஆம் வகுப்பு மாணவன் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள தாமோரா அரசுப் பள்ளியில் முதல்வராக பணியாற்றி வந்தவர் எஸ்கே. சக்சேனா(55).
இவர் பள்ளியில் உள்ள கழிப்பறைக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் சென்றபோது, அங்கு பயிலும் 12ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டுள்ளான்.
இந்த சம்பவத்தில் சக்சேனாவின் தலையில் குண்டு காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பின்னர் அந்த மாணவன் தனது கூட்டாளியுடன் முதல்வரின் இருசக்கர வாகனத்திலேயே அங்கிருந்து தப்பிச் சென்றான். துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவன் மற்றும் அவரது கூட்டாளியும் அதே பள்ளியில் பயிலும் மாணவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதற்கான காரணம் பற்றி குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பலியான சக்சேனா கடந்த 5 ஆண்டுகளாக தாமோரா பள்ளியின் முதல்வராக பணிபுரிந்து வந்திருக்கிறார்.
தற்போது இந்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.