மகாவிஷ்ணு விவகாரம் எதிரொலி; பள்ளிகளுக்கு விருந்தினர்களை அழைக்க கட்டுப்பாடு
1 min read
Mahavishnu issue echoes; Restrictions imposed on inviting guests to schools
6/12/2024
கடந்த ஆகஸ்ட் மாதம், சென்னை சைதாப்பேட்டை அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பரம்பொருள் அறக்கட்டளையின் நிறுவனரான மகாவிஷ்ணு, மாற்றுத் திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பான புகாரின் அடிப்படையில் மகாவிஷ்ணுவை போலீசார் கைது செய்த நிலையில், பின்னர் அவர் ஜாமீனில் விடுதலையானார்.
இந்த சம்பவத்தின் எதிரொலியாக, பள்ளிகளுக்கு விருந்தினர்களை அழைக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், விருந்தினர்களை அழைக்கும்போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து, 28 பக்கங்கள் கொண்ட வழிகாட்டி நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி வெளியிட்டுள்ளார்
அதன்படி மாவட்ட கலெக்டர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருக்கும், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், பள்ளி வளர்ச்சியில் ஆர்வம் கொண்டவர்கள் என்ற பட்டியலில் இருப்பவர்களை மட்டும் பள்ளிகளுக்கு விருந்தினர்களாக அழைக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பட்டியலில் இடம் பெறாதவர்கள் தங்களைப் பற்றிய முழு விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அதனை முழுமையாக ஆய்வு செய்து மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழுவிற்கு பரிந்துரை செய்தால் மட்டுமே அவர்களை விருந்தினர்களாக அனுமதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்பின்பும் பள்ளி நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள், மாணவர்களுக்கு எதிரான கருத்துகளை தெரிவிக்கும் பட்சத்தில், உடனடியாக நிகழ்ச்சியை தலைமை ஆசிரியர்கள் நிறுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.