July 9, 2025

Seithi Saral

Tamil News Channel

நெல்லை அருகே பாதுகாப்பு படை வீரரின் துப்பாக்கி, தோட்டாக்கள் திருட்டு

1 min read

Security force soldier’s gun, bullets stolen near Nellai

6.12.2024
நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த சமூக ரெங்கபுரத்தை சேர்ந்தவர் நம்பி. இவரது மகன் அழகு(வயது 42). இவர் அமிர்தசரசில் இந்திய எல்லை பாதுகாப்பு படையில் போட் என்ற பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

அழகு கடந்த 2010-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் தன்னுடைய பாதுகாப்புக்காக துப்பாக்கி வாங்குவதற்கான உரிமம் பெற்றுள்ளார்.

அதன்பின் கடந்த 2019-ம் ஆண்டு மதுரையில் பெருமாள்சாமி என்பவரிடம் 32-பிஸ்டல் வகையை சார்ந்த துப்பாக்கியையும், அதற்குரிய 30 தோட்டாக்களையும் அவர் வாங்கி உள்ளார். இதில் அவர் சோதனை செய்வதற்காக 5 தோட்டாக்களை பயன்படுத்தி உள்ளார். எஞ்சிய 25 தோட்டாக்களையும் அவர் தன் வசம் வைத்திருந்தார்.

அந்த துப்பாக்கியை அவர் பணியாற்றும் இடங்களில் வைத்திருந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 9-ந்தேதி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு அழகு வந்தார். பின்னர் கடந்த மாதம் 9-ந்தேதி விடுமுறை முடிந்து பணிக்காக மீண்டும் அமிர்தசரஸ் புறப்பட்டுள்ளார்.

அப்போது சமூகரெங்கபுரத்தில் குடியிருந்து வரும் அவரது பெற்றோரிடம் இது முக்கியமான பொருள் என கூறி ஒரு பெட்டியில் தன்னுடைய துப்பாக்கி, 25 தோட்டாக்கள் மற்றும் ஒரு கத்தியை உறையில் வைத்து ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று அழகுவின் பெற்றோர் வீட்டை பூட்டிவிட்டு தங்களது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டனர். தொடர்ந்து அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் அந்த வழியாக சென்றபோது அழகுவின் வீடு திறந்து கிடப்பதை பார்த்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக அழகுவின் பெற்றோர் வீட்டுக்கு வந்து பார்த்தனர். அப்போது கதவுகளை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒரு கத்தி, துப்பாக்கி மற்றும் 25 தோட்டாக்களை காணவில்லை.

வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து மர்ம நபர்கள் அவற்றை திருடி சென்றுள்ளது தெரியவந்தது.

இதுபற்றி அழகுக்கு அவரது பெற்றோர் தகவல் கொடுத்தனர். அவர் உடனடியாக அமிர்தசரசில் இருந்து புறப்பட்டு இன்று காலை ராதாபுரம் வந்து சேர்ந்தார். அவர் ராதாபுரம் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து துப்பாக்கி, தோட்டாக்களை திருடிச்சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் நேற்று அதிகாலை 2 மணியில் இருந்து 4 மணிக்குள் நடந்திருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். நேற்று அதிகாலையில் அதே பகுதியில் 95 வயது மூதாட்டியிடம் கம்மலை பறித்துச்சென்ற அதே கும்பல் தான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.