July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

தெலுங்கானா முன்னாள் எம்.எல்.ஏ. ஜெர்மன் குடிமகன்- தெலுங்கானா ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

1 min read

Former Telangana MLA German citizen – Telangana High Court sensational verdict

9.12.2024
தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்தவர் சென்னமனேனி ரமேஷ். வெமுலவாடா தொகுதியில் இருந்து 4 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவரது குடியுரிமை தொடர்பாக தெலுங்கானா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
வெமுலவாடா தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ஆடி சீனிவாஸ் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார். அவர் தனது வழக்கு மனுவில், சென்னமனேனி ரமேஷ் ஜெர்மனி குடியுரிமை பெற்றவர் என்றும், போலியான ஆவணங்களை தாக்கல் செய்து தேர்தலில் போட்டியிட்டதாகவும் கூறியிருந்தார். அவரது இந்திய குடியுரிமையை ரத்து செய்வது தொடர்பாக உள்துறை அமைச்சகத்தையும் நாடினார்.
இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், சென்னமனேனி ரமேஷ் ஜெர்மன் குடிமகன் என்றும், வெமுலவாடா சட்டமன்ற தொகுதியில் போட்டியிட போலியான ஆவணங்களை பயன்படுத்தியதாகவும் ஐகோர்ட்டு இன்று பரபரப்பான தீர்ப்பை வழங்கி உள்ளது.
‘ஜெர்மன் குடியுரிமை பெற்றிருந்த ரமேஷ், அந்த நாட்டின் குடிமகன் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்களை ஜெர்மன் தூதரகத்திலிருந்து வழங்கத் தவறிவிட்டார். சட்டத்தை மீறி தேர்தலில் போட்டியிட்ட அவருக்கு 30 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கிறோம். இதில், 25 லட்சத்தை மனுதாரர் ஆடி சீனிவாசுக்கு வழங்கவேண்டும்’ என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கடந்த தேர்தலில் (2023) ஆடி சீனிவாசிடம் ரமேஷ் தோல்வியடைந்தார்.
இந்திய சட்டத்தின்படி இந்தியர் அல்லாத ஒருவர் தேர்தலில் போட்டியிடவோ, வாக்களிக்கவோ முடியாது. ஆனால், ரமேஷ் 2023-ம் ஆண்டு வரை செல்லுபடியாகும் ஜெர்மன் பாஸ்போர்ட்டை வைத்திருப்பதாகவும், அவர் தனது விண்ணப்பத்தில் உண்மைகளை மறைத்த காரணத்தால் அவரது இந்திய குடியுரிமையை ரத்து செய்து மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், 2020-ம் ஆண்டில் தெலுங்கானா ஐகோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்தது.

உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை எதிர்த்து ரமேஷ் மேல்முறையீடு செய்திருந்தார். அப்போது அவர் தனது ஜெர்மன் பாஸ்போர்ட்டை சரண்டர் செய்தது தொடர்பாக உரிய ஆவணங்களுடன் பிரமாணப் பத்திரம், ஜெர்மன் குடியுரிமையை விட்டுக்கொடுத்ததற்கான ஆதாரம் ஆகியவற்றை தாக்கல் செய்யும்படி தெரிவிக்கப்பட்டது.

இதே காரணத்திற்காக ரமேசின் இடைத்தேர்தல் வெற்றியை ரத்து செய்து, 2013-ல் மாநிலம் பிரிக்கப்படுவதற்கு முந்தைய ஆந்திர பிரதேச ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. பின்னர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்து, இடைக்கால தடை பெற்றார். இடைக்கால தடை அமலில் இருந்த காலகட்டத்தில் 2014 மற்றும் 2018 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.