June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

“ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு” பற்றி விரைவில் பிரச்சாரம் – ஆதவ் அர்ஜுனா உறுதி

1 min read

Campaign soon on “Party in governance, part in power” – says Adhav Arjuna

10/12/2024
தி.மு.க.வை விமர்சித்து பேசிய விவகாரத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனாவை 6 மாதம் இடைநீக்கம் செய்து திருமாவளவன் நடவடிக்கை எடுத்திருந்தார்.

இதுதொடர்பாக திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரிய வந்தது. கட்சி தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி அவர் தொடர்ச்சியாக எதிர்மறையாக செயல்பட்டு வருவதும், அத்தகைய செயல்பாடுகள், மேலோட்டமாக நோக்கினால் கட்சியின் நலன் மற்றும் அதிகார வலிமைக்கானதாக தோன்றினாலும், அவை கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பக தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில், பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கி இருக்கிறது.
இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு தவறான முன்மாதிரியாக அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கி உள்ளது. இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் ஆகிய 3 பேர் உள்ளடங்கிய தலைமை நிர்வாக குழுவில் ஆதவ் அர்ஜுனா மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, ஆதவ் அர்ஜுனா கட்சியிலிருந்து 6 மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திருமாவளவன், “முதல்-அமைச்சருடனான எங்கள் சந்திப்பிற்கும், ஆதவ் அர்ஜுனா நீக்கத்துக்கும் சம்பந்தம் இல்லை. விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில், நான் பங்கேற்காதது நான் எடுத்த முடிவு என்பது சுதந்திரமான முடிவு. விஜயோடு எங்களுக்கு எந்த சர்ச்சையோ, சிக்கலோ ஏற்பட்டது இல்லை. ஆனால் அவரோடு ஒரே மேடையில் ஒரு நிகழ்வில் பங்கேற்கும்போது எங்களது கொள்கை பகைவர்கள், எங்களுக்கு எதிராக கதை கட்டுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கிறது என்பதை உணர்ந்து நாங்கள் எடுத்த முடிவு. ஒரு மேடையை பகிர்ந்துகொள்ளும் ஆரோக்கியமான சூழ்நிலை தமிழகத்தில் இல்லை. சிண்டுமுடிக்கும் வேலை இங்கு அதிகம்.
நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜுனாவிடம் அரசியல் எதுவும் பேச வேண்டாம் என்று முன்பே சொல்லியிருந்தேன். அதையும் மீறி அவர் பேசிய பேச்சு பல்வேறு சர்ச்சைகளுக்கு இடம் கொடுத்துள்ளது” என்று கூறியிருந்தார்.

இதனிடையே ஆதவ் அர்ஜுனா வெளியிட்டிருந்த எக்ஸ் தள பதிவில், ‘எளிய மக்களுக்கு எதிராக தொடர்ந்து நடந்துவரும் அநீதிகளுக்கு எதிரான என்னுடைய குரல் சமரசமில்லாமல் ஒலித்துக்கொண்டே இருக்கும்’ என்று நேற்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரச்சாரத்தை மக்கள் சக்தியுடன் விரைவில் உருவாக்குவோம் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் வலைதளத்தில், “‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்ற முழக்கத்துடன் எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரச்சாரத்தை மக்கள் சக்தியுடன் விரைவில் உருவாக்குவோம்” என்று அதில் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவுடன் வீடியோ காட்சி ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. அதில் தி.மு.க. உடனான உறவை வெளிப்படுத்தும் விதமான முதல்-அமைச்சரின் மருமகன் சபரீசனுடன் இருக்கும் புகைப்படத்தை ஆதவ் அர்ஜுனா பகிர்ந்துள்ளார். ஆதவ் அர்ஜுனாவின் ஒன் மைண்ட் இந்தியா நிறுவனமே தி.மு.க.வுக்கு தேர்தல் வியூகம் வகுத்ததாக அந்த வீடியோவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.