கர்நாடக எழுத்தாளருக்கு தமிழக அரசின் வைக்கம் விருது அறிவிப்பு
1 min read
Tamil Nadu government announces Vaikom Award for Karnataka writer
11.12.2024
தமிழ்நாடு அரசின் 2024-ம் ஆண்டுக்கான வைக்கம் விருது கர்நாடக எழுத்தாளர் தேவநூர மஹாதேவாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டமன்றப் பேரவையில், கடந்த 30.03.2023 அன்று எல்லை கடந்து சென்று சமூக நீதிக்காக வைக்கத்தில் போராடிய தந்தை பெரியாரை நினைவுகூரும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் “வைக்கம் விருது” சமூகநீதி நாளான செப்டம்பர் 17-ம் நாளன்று தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் என்று சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் அறிவித்தார்.
அந்த அறிவிப்பிற்கிணங்க, 2024-ம் ஆண்டிற்கான “வைக்கம் விருது” கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டத்தை சேர்ந்த புகழ் பெற்ற எழுத்தாளர் தேவநூர மஹாதேவாவுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவநூர மஹாதேவா ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். மக்களின் மொழியியல் உரிமைகளின் மீதான நிலைப்பாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர். மேலும், சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராகச் செயல்பட்டவர். இவர் மத்திய அரசின் உயரிய விருதான பத்மஶ்ரீ மற்றும் சாகித்ய அகாடெமி விருது போன்ற பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
வைக்கம் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தேவநூர மஹாதேவாவுக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் தங்க முலாம் பூசிய பதக்கம் தமிழ்நாடு முதல்-அமைச்சரால் கேரள மாநிலம் வைக்கத்தில் நாளை (12/12/2024) நடைபெற உள்ள வைக்கம் நினைவகம் திறப்புவிழா நிகழ்ச்சியில் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.