தென் மாவட்ட மழை, வெள்ள பாதிப்பு குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை
1 min read
MK Stalin’s advice on rain and flood damage in the southern district
14/12/2024
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த 3 நாட்களாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பதிவானதன் காரணமாக, தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருவதால், மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேற்று முதல்-அமைச்சர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண பணிகள் குறித்தும் கேட்டறிந்து தேவையான அறிவுரைகள் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, இன்று தென் மாவட்ட மழை, வெள்ள பாதிப்பு குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்தினார். அப்போது, தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், அணைகளின் நீர் இருப்பை கண்காணிக்க வேண்டும் என்றும், அணைகளிலிருந்து நீரினை திறந்துவிடும் போது பொதுமக்களுக்கு உரிய முன்னெச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் முன்னதாகவே தங்க வைக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
கனமழையால் ஏற்பட்ட பயிர் சேத விவரங்கள் உட்பட அனைத்து சேத விவரங்களையும் துரிதமாக கணக்கிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார். இந்தக் கூட்டத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.