மழை, வெள்ளம்: திருச்செந்தூருக்கு 2 நாட்கள் வர வேண்டாம்- கலெக்டர் வேண்டுகோள்
1 min read
Rain, floods: Don’t come to Tiruchendur for 2 days – Collector’s request
14.12.2024
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கடந்த 2 நாட்களாக அதிகனமழை பெய்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் 2-வது நாளாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தற்போது ஆற்றில் 56 ஆயிரம் கன அடி நீர் சென்றுகொண்டிருக்கிறது.
தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஏரல் தரைமட்ட பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து சென்றது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும், புன்னைக்காயல் பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இந்த நிலையில், மழை, வெள்ள பாதிப்பு காரணமாக திருச்செந்தூருக்கு செல்வதை பக்தர்கள் 2 நாட்கள் தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மேலும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது;
“மழை மற்றும் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக ஸ்ரீவைகுண்டம்-திருச்செந்தூர் மற்றும் ஏரல்-திருச்செந்தூர் சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. திருச்செந்தூர் சாலைகளில் வெள்ள நீர் செல்வதால் வாகனங்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே மழை, வெள்ளத்தினை கருத்தில் கொண்டு 2 நாட்களுக்கு திருச்செந்தூர் கோவிலுக்கு வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.