பாதுகாப்பு கருதி குற்றால அருவியில் குளிக்க 4வது நாளாக தடை
1 min read
Ban on bathing in Courtala Falls extended for 4th day due to safety concerns
15.12.2024
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கடந்த 3 நாட்களாக காட்டாற்று வெள்ளம் கொட்டி வந்தது. இதனால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் நடமாட்டமின்றி அருவிக்கரை பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.
இந்நிலையில் பெருவெள்ளம் தற்போது குறைந்துள்ளநிலையில் பாதுகாப்பு கருதி குற்றால அருவியில் குளிக்க 4-வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 3 நாட்களுக்கு மேலாக குற்றாலம் மெயின் அருவியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் வனப்பகுதிக்குள் நின்ற குட்டி யானை ஒன்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு மெயின் அருவி வழியாக கீழே விழுந்து உயிரிழந்து சிற்றாற்றின் கரையோரம் ஒதுங்கியது. பின்னர் யானையின் உடலை அங்கேயே வனத்துறை அலுவலர்கள் பிரேத பரிசோதனை செய்தனர்.
குற்றாலத்தில் இதுவரையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம் வனப்பகுதியில் இருந்து மரக்கிளைகள் மற்றும் பாம்பு, உடும்பு உள்ளிட்ட உயிரினங்களே விழுந்த நிலையில், முதன் முதலாக வெள்ளத்தில் குட்டி யானை அடித்து வரப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.