புயலில் இரண்டாக பிளந்த ரஷிய எண்ணெய் கப்பல்
1 min read
Russian oil tanker split in two in storm
16.12.2024
கருங்கடலில் 29 ஊழியர்கள் சென்ற 2 ரஷ்ய எண்ணெய் கப்பல்கள் புயலில் சிக்கி கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், அவற்றில் இருந்து எண்ணெய் கசிந்து வருவதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 15) ரஷ்யாவுக்கும், கிரீமியாவுக்கும் இடைப்பட்ட கெர்ச் ஜலசந்தியில் ஏற்பட்ட கடுமையான புயலின் போது 15 ஊழியர்களுடன் ஆயிரக்கணக்கான டன் எரிபொருள் எண்ணெய்யை ஏற்றிச் சென்ற ரஷ்ய எண்ணெய் கப்பல் [வோல்கோனெப்ட் 212] இரண்டாக பிளந்து அதில் இருந்த எண்ணெய் கடலில் கசியத் தொடங்கி உள்ளது.
இந்த விபத்தில் ஒரு ஊழியர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 14 ஊழியர்களுடன் சென்ற இரண்டாவது டேங்கர் கப்பலும் [வோல்கோனெப்ட் 239] புயலால் சேதம் அடைந்து அதே பகுதியில் மெதுவாக நகர்ந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இழுவைப் படகுகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட பணியாளர்களை உள்ளடக்கிய குழு மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பதாக ரஷிய ஊடகம் தெரிவித்துள்ளது.