குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க 6-வது நாளாக தடை
1 min read
Bathing in the Courtallam Main Waterfall banned for 6th day
17.12.2024
தென்காசி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் காட்டாற்று வெள்ளம் ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்தது. அருவியின் மேற்பகுதியில் இருந்து பாறைகள், மரக்கிளைகள் உள்ளிட்டவை அடித்து வரப்பட்டன. இதனால் மெயின் அருவி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதைகள், தடுப்பு கம்பிகள் ஆகியவை சேதமடைந்தன
இதனிடையே வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட ஒரு ஆண் யானையின் சடலம் அருவிக்கரையில் மீட்கப்பட்டது. இதனை தொடர்ந்து குற்றாலம் மெயின் அருவியில் காட்டாற்று வெள்ளத்தின் வேகம் சற்று தணிந்தது. இதையடுத்து பேரூராட்சி ஊழியர்கள் குற்றால அருவியில் முகாமிட்டு, சேதங்களை சரிசெய்யும் பணியை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், பாதுகாப்பு கருதி குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 6-வது நாளாக இன்று தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், ஐந்தருவி மற்றும் புலியருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.