ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு
1 min read
Erode East constituency declared vacant
17.12.2024
2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் 159 இடங்களை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. அ.தி.மு.க. கூட்டணி 75 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ், போட்டியிட்ட 25 தொகுதிகளில் 18 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா வெற்றி பெற்று முதன் முறையாக சட்டமன்றத்துக்குள் நுழைந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி 4-ந் தேதி திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என தி.மு.க. தலைமை அறிவித்தது. அதன்படி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் எம்.எல்.ஏ.வாக சட்டமன்றத்தில் நுழைந்தார்.
இந்த நிலையில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மரணம் அடைந்ததை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. இந்த தகவல் கடிதம் மூலம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து இடைத்தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும். ஏற்கனவே காலியாக உள்ள சட்டசபை தொகுதிகள் அல்லது பிற மாநில சட்டசபை தேர்தல்களோடு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்தவகையில் ஒரே ஆட்சி காலத்தில் 2 முறை இடைத்தேர்தலை ஈரோடு கிழக்கு தொகுதி சந்திக்க இருக்கிறது. வாக்காளர்கள் 3-வது முறையாக வாக்களிக்க போகிறார்கள்.