கள்ளக்குறிச்சி வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
1 min read
Kallakurichi case: Tamil Nadu government’s appeal dismissed
17.12.2024
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் குடித்து 68 பேர் பலியானார்கள். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என அதிமுக, தேமுதிக, பாஜக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி கடந்த மாதம் (நவம்பர்) 20-ந்தேதி உத்தரவிட்டது.
இதையடுத்து சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்தும், ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல் டி.குமணன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில் விஷ சாராய வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தால் அதன் விசாரணை முடிய கால தாமதம் ஆகும் என்றும் தமிழ்நாடு காவல்துறையே விசாரணையை தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் மேல்முறையீட்டு மனுவில் வலியுறுத்தப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், இந்த மனு நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கள்ளக்குறிச்சி வழக்கில் தமிழக காவல்துறை விசாரணையை முடித்துவிட்டது; சென்னை ஐகோர்ட்டு முடிவில் தலையிட விரும்பவில்லை என கூறிய நீதிபதிகள் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும் கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை என்றும், சிபிஐ விசாரணையை நடத்தலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.