எழுத்தாளர் இமையம் எழுதிய ‘கலைஞரின் படைப்புலகம்’ புத்தகம் – முதல்-அமைச்சர் வெளியிட்டார்
1 min read
The book ‘Kalaignarin Kurapakalagam’ written by the Writers’ Center – released by the Chief Minister
17.12.2024
எழுத்தாளர் இமையம் ‘கலைஞரின் படைப்புலகம்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17.12.2024) தலைமைச் செயலகத்தில், எழுத்தாளர் இமையம் எழுதிய “கலைஞரின் படைப்புலகம்” நூலினை வெளியிட்டார். நூற்றாண்டு காணும் ஆளுமைகள் எனும் தலைப்பின்கீழ் புகழ்பெற்ற அரசியல் ஆளுமைகள் மற்றும் எழுத்தாளர்கள் குறித்து சிறப்பு நூல்களை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் 2022-ம் ஆண்டு முதல் வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் இமையம் அவர்களால் “கலைஞரின் படைப்புலகம்” என்ற இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
இந்நூலானது, கலைஞர் எழுதிய நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், கடிதங்கள், பயண நூல், திரைக்கதை வசனங்கள், திரையிசை பாடல்கள், நெஞ்சுக்கு நீதி, உரைகள் ஆகியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளின் தொகுப்பாகும். இந்நூலில் இந்திய அளவில் புகழ்பெற்ற 19 எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய ஒரு கட்டுரையும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.
இந்நூலில், முத்தமிழறிஞர் கலைஞரின் நூல்கள் எந்தெந்த ஆண்டு எழுதப்பட்டது என்ற விவரமும் காலவரிசைப்படி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வின்போது, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமை செயலாளர் நா.முருகானந்தம், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சோ.மதுமதி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் முனைவர் பொ. சங்கர், இணை இயக்குநர் முனைவர் தே.சங்கர சரவணன், எழுத்தாளர் இமையம், ஆலோசகர் அப்பன்னசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.