தென்காசி மாவட்டத்தில் நிரம்பாத குளங்கள்- ஏன்?
1 min read
Why are the ponds in Tenkasi district not full?
17.12.2024
தென்காசி மாவட்டத்தில் கடந்த பல நாட்களாக தொடர்ந்து வரலாறு காணாத மழை வெள்ளம் ஏற்பட்ட நிலையிலும் ஏராளமான விவசாய பாசன குளங்கள் நிரம்ப வில்லை இது பற்றி சமூக ஆர்வலர் இராம. உதயசூரியன் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வகையில் தொடர்மழை பெய்தது.அதனால் கடும் வெள்ளம் ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சிற்றாற்றில் கடும் வெள்ளம் ஏற்பட்டு பாலங்கள் மூழ்கியது
போக்குவரத்து பாதிக்கப்பட்டு பல்வேறு கிராமங்கள் துண்டிக்கப்பட்டது.
பொதுவாக சிற்றாற்றில் வெள்ளப்பெருக்கு என்பது அபூர்வமாகவே நடைபெறும். 1992-ம் ஆண்டுக்கு பிறகு இப்போது அதற்கு சமமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் பெரும் சேதங்களை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக தென்காசி அருகே உள்ள துவரங்காடு, வெள்ளகால், இராஜபாண்டி, ஆகிய கிராமங்கள் வழியாக சிற்றாறு நீர் கொண்டு செல்லப்படும். மாறாந்தை கால்வாய் பகுதிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
ஆனால் இதில் ஒரு வியப்பான செய்தி என்ன வென்றால் சாதாரணமாக வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவகாலங்களில் பெய்யும் வழக்கமான மழைகளில் பெருகக்கூடிய கீழப்பாவூர் பெரியகுளம், நாகல்குளம், கடம்பன்குளம் மற்றும் அதன் கீழ் உள்ள குளங்கள் இந்த அதிகப்படியான வெள்ளம் ஏற்பட்ட நிலையிலும் இதுவரை பல்வேறு விவசாய பாசன குளங்களுக்கு தேவையான அளவுக்கு தண்ணீர் வரவில்லை குளங்கள் பெருக வல்லை . அந்த குளங்கள் பெருகாமல் போனது ஏன் என்ற கேள்வி பலர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது விவசாய பாசன குளங்களுக்கு தண்ணீர் வரும் கால்வாய்கள் தூர்வாரப் படவில்லை. கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. மேலும் விவசாய பாசன குளங்களில்
தூர்வாறும் பணிகள் முறையாக நடைபெறவில்லை. விவசாய பாசன குளங்களில் கரைகள் பலப்படுத்தப்படவில்லை. குளங்களின் மதகுகள் சீரமைக்கப்படவில்லை. இதனால் தண்ணீர் வீணாகிவிட்டது. என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தென்காசி மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் இவ்வளவு மழை பெய்தும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் விவசாய பாசன குளங்கள் நிரம்பவில்லை விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய முடியவில்லை என்றால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள்.இனிவரும் காலங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டு வடும்
எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து விவசாய பாசன குளங்கள், மற்றும் குளங்களுக்கு வரும் பாசன கால்வாய்கள் தூர்வாரப்பட்டுளளதா? குளங்களின் கரைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதா? குளங்களின் மதகுகள் பழுது பார்க்கப்பட்டுள்ளதா? என்பதை எல்லாம் ஆய்வு செய்வதோடு வரும் காலங்களில் இது போன்ற ஆக்கபூர்வமான பணிகளில் அரசு கவனம் செலுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர் இராம உதயசூரியன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்